91 வயதில் மலர்ந்த காதல்… காரணம் சொல்லும் தொழிலதிபர்!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும்,  டிஎல்எஃப் குழுமத் தலைவருமான குஷால் பால் சிங், 2008 -ம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர் பட்டியலில் உலகின் 8 -வது பணக்காரர் இடத்தை பிடித்தார்.

பூகம்பத்தைத் தடுக்கும் வகையில் அலுவலக கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டி கொடுத்த வகையில் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.

குஷால் பால் சிங்

வெளிநாடுகளில் தனது கல்லூரி படிப்பை முடித்த இவர், தனது மாமனாரின் டிஎல்எஃப் நிறுவனத்தில் 1961-ஆம் ஆண்டில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் 50 ஆண்டுகள் தலைமை பொறுப்பில் இருந்தார். இவரது மனைவி இந்திரா சிங் 65 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 2018-ல் இறந்தார்.   

“என் மனைவி எனக்கு துணையாக மட்டுமல்ல தோழியாகவும் இருந்தாள். எங்கள் திருமண வாழ்க்கை அற்புதமானதாக இருந்தது” என்று குறிப்பிட்ட சிங், மனைவியின் மறைவைத் தொடர்ந்து, வழக்கமான உற்சாகம், சுறுசுறுப்பை இழந்தார். இதனால் அவர் நிறுவனத்தின் நிர்வாக செயல்பாடுகளில் இருந்து சற்று பின்வாங்கினார். மேலும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், டிஎல்எஃப் குழுமத்தின் பொறுப்பில் இருந்து 2020-ல் விலகினார். அடுத்த சில மாதங்களாக ஓய்வாக தனிமையில் இருந்த குஷால் பால் சிங் வாழ்வில் ஷீனா என்ற பெண் மீண்டும் வசந்தத்தை ஏற்படுத்தினாள். அவள் மூலம் 91 வயதில் சிங் –ன் வாழ்வில் மீண்டும் திருப்பம் வந்தது, காதல் மலர்ந்தது.

தன்னுடைய வாழ்க்கை குறித்து மனம் திறந்த சிங், நீண்ட காலமாக நம்முடன் வாழ்ந்த ஒரு துணையை இழந்த பிறகு எப்போதும் போல சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு துணையை இழக்கும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளையும் இது பாதிக்கிறது.  ஒரு நிறுவனத்தை நடத்தும் நபர் நேர்மறையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். நீங்கள் நேசிப்பவரை இழக்கும்போது, அது உங்கள் செயல்பாடுகளை பாதிக்கும்.. வேகத்தைக் குறைக்கும்.

குஷால் பால் சிங்

என் மனைவி இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, வாழ்க்கையை விட்டுவிடாதே என்றாள். எனக்கு முன்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று அவள் என்னிடம் சொன்னாள். என்னை உயிரை விடமாட்டேன் என்று சத்தியம் செய்யச் சொன்னாள். இந்த வாழ்க்கை திரும்ப வராது என்றாள் என் மனைவி. இந்த வார்த்தைகள் என் மனதில் அப்படியே ஒலிக்கிறது. என் மனைவியின் அறிவுரையை கேட்டதன் மூலம், மீண்டும் அன்பைக் கண்டுபிடிக்க முடிந்தது” என்றார்.

சிங் தனது புதிய காதல் பற்றி பேசும்போது, “அவள் பெயர் ஷீனா. அவள் இப்போது என் வாழ்க்கையில் சிறந்தவளாக விளங்குகிறார். அவள் மிகவும் ஆற்றலும் அன்பும் உள்ளவள்.  அவள் என்னை என் காலில் நிற்க வைத்திருக்கிறாள். அவளுக்கு உலகம் முழுவதும் பல அற்புதமான நண்பர்கள் உள்ளனர்,  அதனால் நான் அவளுடன் பயணிக்க விரும்புகிறேன். அவள் எப்போதும் என்னை ஊக்குவிக்கிறாள். நான் சோர்வாக உணரும் போதெல்லாம், அவள் என்னை மேலே உயர்த்துகிறாள்” என்று தெரிவித்தார்.

குஷால் பால் சிங்

குஷால் பால் சிங், குர்கானில் பூகம்பத்தால் பாதிக்காத வண்ணம் அலுவலக கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என ஏராளமான கட்டிடங்களை நவீன வசதிகளுடன் கட்டினார். அவர் DLF -ன் தலைவராக இருந்தபோது, நிறுவனம் 2007 -ல் புதிய பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொண்டு சுமார் 2.24 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாகும். நிறுவனத்தின் சந்தை மூலதனம் 24.5 பில்லியன் டாலராக அதிகரித்து. இதனால் சிங் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் என்பது குறிபிடத்தக்கது. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உண்டு என்று சொல்லுவார்கள்.. அந்த இடத்தை இப்போது ஷீனா நிறைவு செய்வார் என்று குஷால் பால் சிங் விரும்புகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.