எதிர்கால வலு சக்தியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணு சக்தியை மாற்று முறையாக பயன்படுத்த நடவடிக்கை

எதிர்கால வலு சக்தியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணு சக்தியை மாற்று முறையாக பயன்படுத்துவது குறித்து கவனத்தில் கொள்ள அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயத்தில் கவனம் செலுத்தவதற்காக குழு ஒன்றும் செயற்பாடுகளுக்கான 9 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள சுய மதிப்பீட்டு அறிக்கை தொடர்பில் சர்வதேச அணு சக்தி தொடர்பான பிரதிநிதிகளினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளுக்கு அமைவாக அணு சக்தி மூலமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆற்றல் இலங்கைக்கு இருப்பதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

06.          அணுப் பொறுப்புக்கள் தொடர்பான பிரதான இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளில் இலங்கையும் ஒரு தரப்பினராதல்

இலங்கையின் எதிர்கால வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு வலுச்சக்தி மாற்று வழிமுறையாகக் கொள்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு இணங்கியொழுகி அணுச்சக்தியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்தல் பற்றி விடயங்களை ஆராய்வதற்காக நெறிப்படுத்தல்  குழுவொன்றும் 09 செயற்பாட்டுக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த செயற்பாட்டுக் குழுக்களால் தயாரிக்கப்பட்டுள்ள சுயமதிப்பீட்டு அறிக்கை பற்றி சர்வதேச அணு வலுசக்தி முகவராண்மை நிறுவனம் வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, அணுச்சக்தியில் மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் கருத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கைக்கு இயலுமை உண்டு. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அணுப் பாதிப்புக்களுக்கான குடியியல் பொறுப்புக்கள் பற்றிய வியானா சமவாயம் மற்றும் அணுப் பாதிப்புக்களுக்கான குறைநிரப்பு இழப்பீட்டு சமவாயத்தின் தரப்பினர்களாவதற்கு பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சமவாயங்களில் தரப்பினராவதற்கு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.