கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு இன்று அதிகாலை 1.09 மணியளவில் போயிங்-737 என்ற விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 178 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் இடதுபக்க இன்ஜினின் பிளேடு உடைந்திருப்பதை விமானி கவனித்தார். அதையடுத்து அவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக தொடர்பு கொண்டார். அவர்களின் ஆலோசனையின்படி, கொல்கத்தா விமான நிலையத்தில் தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
அதன்பின் அதிகாலை 1.27 மணியவில் மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் பழுது சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 7.10 மணியளவில் மற்றொரு பயணிகள் விமானத்தின் மூலம் அனைவரும் பாங்காக் புறப்பட்டுச் சென்றனர்.