தொடர் வீழ்ச்சிக்கு பின் மீளும் அதானி குழும பங்குகள் – வர்த்தகம் தொடங்கியது முதல் கிடுகிடு உயர்வு

டெல்லி,

அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் கடந்த மாதம் 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 3 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்த நிலையில் அந்த பங்கு விலை பெருமளவு குறைந்துவிட்டது. குறிப்பாக, கடந்த 3-ம் தேதி அதானி எண்டர்பிரைசின் ஒரு பங்கு விலை 1 ஆயிரத்து 17 ரூபாய் என்று மிகக்குறைந்தது. அதன் பின்னர் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியிலேயே இருந்தன.

அந்த வகையில், தேசிய பங்கு சந்தையில் நேற்று வர்த்தக இறுதியில் அதானி எண்டர்பிரைஸ் பங்கு ஒன்றின் விலை1 ஆயிரத்து 118 ரூபாய்க்கு என்று நிறைவானது.

இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை இன்று தொடங்கியது முதல் அதானி குழுமத்தின் பங்குகள் விலை ஏறத்தொடங்கியது. அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் விலை மெல்ல மெல்ல ஏறி வருகிறது.

அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1 ஆயிரத்து 372 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றை விட 15 சதவிகிதம் அதிகமாகும். அதானின் குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் ஏற்றம்கண்டு வருகின்றன.

ஆனாலும், அதானி குழுமம் பழைய நிலைக்கு திரும்புமா? என்பதில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.