ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆட்சியாளர்கள் மக்கள் பக்கம் நிற்கிறார்களா, இல்லையா என்பதை பொறுத்து தான் ஒரு அரசு எப்படிபட்டது என்பதை கூற முடியும். மக்களை வாக்காளர்களாக மட்டுமே கருதியிருந்தால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட காலத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்காது.
அண்ணாவின் தம்பி மு.க.ஸ்டாலின்
‘மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று’ என்பது பேரறிஞர் அண்ணா தனது தம்பிகளுக்கு சொன்னது. அண்ணாவின் வார்த்தைகளை தனது சிந்தனையில் ஏற்றி, கலைஞர் வழியில் நடக்கும் முதல்வர் ஸ்டாலின் எப்போதும் எளிய மக்கள் அணுகக் கூடிய இடத்திலேயே இருக்கிறார். தன்னைச் சுற்றி இரும்புக் கதவுகள் அமைத்து அதன் உள் இருந்து ஆட்சி நடத்தியிருந்தால் எளிய மக்களின் குரல்கள் கேட்காமல் போயிருக்கும். 21 மாதங்களில் இமாலய சாதனைகள் நடந்திருக்காது.
முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற போது தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தது. அந்த சமயம் அரசு இயந்திரம் வேகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் முனைப்பு காட்டி கொரோனாவை வென்று காட்டியது.
இது எப்படி சாத்தியமானது?
நோய்க்கு மருந்து கொடுப்பதை போல் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறி மனரீதியாக வலிமைப்படுத்துவது முக்கியமானது. அதேபோல் இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களிடம் உங்களோடு நாங்களும் இருக்கிறோம் என்று அளிக்கும் ஊக்கம் மிக முக்கியமானது. இந்த இரண்டையும் வாய் வார்த்தையால் சொல்லி கடந்து போகாமல் பாதுகாப்பு உபகரணங்களோடு கொரோனா வார்டுக்குள் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று செய்தார். பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் இருதரப்புக்கும் இந்த செயல் தெம்பூட்டும் விதமாக அமைந்தது.
சுத்தமான இடத்தில் நான்கு குப்பைகளை போட்டு துடைத்து அள்ளுவது போல் அல்ல இது, கிட்டதட்ட உயிரை பணயம் வைத்தே ஸ்டாலின் இதை செய்தார். இதன் மூலம் ஆரம்பத்திலேயே மக்களின் முதல்வராக நம்மில் ஒருவராக மக்கள் அவரை பார்க்கத் தொடங்கினர்.
உங்களில் ஒருவன்!
கனமழை, வெள்ளம் என எந்த இடர்பாடு வந்தாலும் ஒரு பக்கம் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஊக்கம் அளித்து வேலை வாங்குவது, மற்றொரு புறம் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று துயர் துடைப்பது இந்த இரண்டையும் ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார்.
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தமிழ்நாட்டில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக கலைஞர் ஆட்சியில் பிறபடுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னிலை பெற எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஸ்டாலின் தனது ஆட்சியில் இன்னும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை நோக்கி தனது பார்வையை செலுத்தி வருகிறார்.
இது ஸ்டாலின் காலம்!
இரண்டாயிரம் ஆண்டு தீண்டாமை அழுக்குகளை திராவிட இயக்கம் கடந்த ஒரு நூற்றாண்டாக சுத்தம் செய்து வருகிறது. இதில் தனது பங்கும் வலுவானதாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் ஒவ்வொரு திட்டத்தையும் செதுக்கி வருகிறார். கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கி இருக்கும் இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட சமூகங்களைத் தேடிச் சென்று வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
மாற்றத்திற்கான குறியீடு!
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அரசுப் பள்ளி உள்ளிட்ட பொது இடங்களில் சந்திக்கும் சமூக புறக்கணிப்பு குறித்து மாணவி ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் உடனடியாக அந்த மாணவியிடம் வீடியோ காலில் பேசிய ஸ்டாலின் அந்த மாணவியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு சென்று உணவருந்தினார். ஸ்டாலின் உணவருந்திய அந்த புகைப்படம் மாற்றத்திற்கான குறியீடு. நான் உங்களுடன் இருக்கிறேன், உங்களில் ஒருவன் என்பதை சொல்வதாக அது அமைந்துள்ளது. இது சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை சத்தமில்லாமல் ஏற்படுத்தும்.
துயர் துடைக்க வரும் முதல் கை!
எளியோருக்கு ஏற்படும் எந்த பிரச்சினையையும் போக்க முதல் ஆளாக வந்து நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின் . ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி டானியா. அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது நோய் குணமாகாமல் இருந்தது. இது முதல்வர் பார்வைக்கு சென்ற உடன் அவர் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் தனது பணி முடிந்ததாக முதல்வர் நினைப்பதில்லை. சிகிச்சையின் ஒவ்வொரு படிநிலையும் எப்படி இருக்கிறது. சிறுமி இப்போது எப்படி இருக்கிறார் என தனது பணி நடுவிலும் ஸ்டாலின் விசாரித்தபடியே இருந்தார். மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து சிறுமியின் வீட்டுக்கு சென்றும் அவரிடம் பேசினார்.
முதல்வன் எனும் தோழன்!
‘முதல்வர் என்பது எனக்கு நீங்கள் வழங்கியிருக்கும் பதவி அல்ல, பொறுப்பு’ என்று அவர் தனது நெஞ்சத்திலிருந்து கூறுவதாலேயே நம்பர் 1 முதல்வராக அவரால் வலம் வர முடிகிறது. நாற்காலியில் கால் மேல் கால் போட்டு நடத்துவது அல்ல, மக்களின் தோள் மீது கை போட்டு நடக்கும் ஆட்சி தன்னுடையது என ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்.