சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் பலியான 3 அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக் (13) த/பெ.சாமுவேல், விஜய் (12) த/பெ.ராஜி, மற்றும் சூர்யா (10) த/பெ.ராஜி ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வளையாம்பட்டை ஒட்டியுள்ள அணுகு சாலையில் பள்ளி மாணவர்கள் மீது, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மிதிவண்டியில் பள்ளிக்கு வந்துக் கொண்டிருந்த மாணவர்கள் சூர்யா, ரபீக் மற்றும் விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சாலை விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்படப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் என்பதும், ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தபோது இந்த விபத்து நேரிட்டதும் தெரியவந்தது. வாணியம்பாடி கிராமிய காவல துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேலூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வளையாம்பட்டு பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுவதால் இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதை உள்ளூர்வாசிகள் சுட்டிக்காட்டினர்.