கோரிக்கை வைத்தேன் ஆனா… புஸ்வானமான உதயநிதியின் டெல்லி டூர்..!

டெல்லிக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்; பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்துகொள்ள நேற்று டெல்லி வந்தேன். அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து கோரிக்கைகளை வைத்தேன்.

கடந்த முறை மோடி சென்னைக்கு வந்தபோது அடுத்தமுறை டெல்லிக்கு வந்தால் என்னை பார்த்துவிட்டு போக வேண்டும் என்று பிரதமர் என்னிடம் சொன்னார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். வாய்ய்பு கிடைத்தது. அவர் முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நான் பிரதமர் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன்.

மேலும், தமிழநாட்டின் விளையாட்டு மேம்பாடு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை குறித்து எடுத்துரைத்தேன். அடுத்த முறை கேலோ இந்தியா போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்றும் இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையிலும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழ்நாடு மக்களின் மனநிலையை குறித்து பேசினேன். தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம் என்பதையும் அவரிடம் கூறினேன். அதற்கு பிரதமர் சில விளக்கங்களை கொடுத்தார். பின்னர் நீண்ட நேரம் மனம் விட்டு என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் கோரிக்கைகளுக்கு அவர் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுவா அரசுமுறை பயணம்

அரசுமுறை பயணமாக உதயநிதி டெல்லிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் நீட் தேர்வு, கேலோ விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துதல், விளையாட்டு ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால், அதற்கு பிரதமர் தரப்பில் பரிசீலினை செய்யப்படும் என்ற வழக்கமான பதில்கூட உதயநிதிக்கு தெரிவிக்கவில்லை. இதை அப்படியே மீடியா முன்பு கூறிய உதயநிதி, பிரதமர் நீண்ட நேரமாக மனம் விட்டு பேசியதாக தெரிவித்தார். எனவே இந்த பயணம் உதயநிதியின் தனிப்பட்ட பயணம் என்றும் இதை ஏன் அரசுமுறை பயணம் என்று குறிப்பிட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.