கணக்கை முடிக்க வங்கி முன் திரண்ட மக்கள்… அதானி பிரச்னைதான் காரணமா? உண்மை என்ன?

அதானி குழும நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி புகார்களை முன்வைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் அதிர்வலைகள் ஒரு மாத காலத்துக்கும் மேல் ஆகியும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அய்ன் நகரத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளையின் முன் மக்கள் திரண்டனர்.

இதற்குக் காரணம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகும் பேங்க் ஆஃப் பரோடா அதானி நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் என கூறப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அந்த வங்கியின் கணக்கை முடித்து பணத்தை எடுக்க திரண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்தத் தகவல் உண்மையா என்பது குறித்த கேள்விகளும் இதைத் தொடர்ந்து எழுந்தன.

அதானி – ஹிண்டன்பர்க்

காரணம் அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து தொடர்ச்சியாக அக்குழுமத்தின் பங்கு விலைகள் கடுமையாகச் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு கிட்டதட்ட ரூ.12 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்திருக்கின்றன. இதனால் அதானி தனிப்பட்ட சொத்து மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டிருக்கிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்போது 38-ம் இடத்துக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்.

என்னதான் பங்கு மதிப்பு அடிப்படையில் அவரின் சொத்து மதிப்பு குறைந்திருந்தாலும், அவருடைய தனிப்பட்ட சொத்துக்களாக இருப்பவற்றின் மதிப்பு ஒரு போதும் குறையாது என்பது வேறு கதை. ஆனாலும் இந்த பங்கு மதிப்பு குறைந்திருப்பதால் சர்வதேச அளவில் அதானி குழுமங்களின் மீதான நம்பிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது.

இதனால் தொடர்ச்சியாக அதானி குழுமத்துக்கு எதிரான ஏதோ ஒரு செய்தி வந்தவண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே பல வங்கிகள், கடன் நிறுவனங்கள் அதானி குழுமப் பத்திரங்களை அடமானமாக ஏற்க மாட்டோம் எனக் கூறியிருந்தன. இந்நிலையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஃபண்ட் நிறுவனமாக இருக்கும் நார்வே பென்சன் ஃபண்ட் அதானி குழுமப் பங்குகளை விற்று வெளியேறியிருக்கிறது. மாறாக அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகளில் முதலீடுகளை மேற்கொண்டுவருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியும் அதானி குழுமத்துக்கு எதிராக அமைந்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடாவின் அதானி குழும நிறுவனங்களுக்கான கடன் குறித்த அறிக்கை வெளியானதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அய்ன் வங்கிக் கிளையின் முன் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் இரண்டையும் இணைத்து செய்திகளைப் பரப்பிவிட்டனர்.

இதையடுத்து பேங்க் ஆஃப் பரோடா வங்கி பதறியடித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அல் அய்ன் வங்கிக் கிளையானது பிசினஸ் ரீதியான முடிவுகளின்படி மூடப்படுவதாகவும், கிளை மூடப்படுவதால் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கத் திரண்டிருக்கின்றனர் என்றும் வங்கித் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

இது தொடர்பாக பேங்க் அஃப் பரோடா வங்கி அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வணிக காரணங்களுக்காக அல் அய்ன் கிளை மூடப்படுவதாகவும், எனவே வாடிக்கையாளர்கள் கணக்குகள் இந்தக் கிளையிலிருந்து அபுதாபி கிளைக்கு மாற்றப்படுகிறது. எனவே அதற்கு முன்னதாக கணக்கை முடித்துக்கொள்ள விரும்புபவர்கள் எந்தவித கட்டணம், அபராதம் இல்லாமல் முடித்துக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தோம். அதுதான் வாடிக்கையாளர்கள் குவியக் காரணம். எனவே தவறான செய்திகளை நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.