புதுச்சேரி: சாலை விதிகளை மீறுபவர்களுக்கு `செக்’ வைத்த காவல்துறை! – நடைமுறைக்கு வந்தது ’இ–செலான்’

புதுச்சேரியில் அதிகரித்துவரும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் ‘ இ-செலான்’ முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான கையடக்க கருவியை அனைத்து காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்களுக்கு ஐ.ஜி சந்திரன் வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சமீபத்தில் தற்கொலை செய்த 3 காவலர்களில் 2 பேர் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தற்கொலைக்கு மன அழுத்தமோ, வேலை பளுவோ காரணமில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட காவலர்கள் தங்கள் உயரதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து விடுப்பையும், இடமாற்றத்தையும் கேட்கலாம். ஆண்டுக்கு 300 பேர் புதுவையில் தற்கொலை செய்கின்றனர். இதில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்பதை காவல்துறை ஊக்கப்படுத்தி வருகிறது. பணிச் சுமையை குறைக்க புதிதாக பயிற்சி பெற்று வரும் காவலர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவார்கள்.

அபராதம்

போலீஸார் இரவில் ரோந்து பணியில் இருக்க வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். இரவில் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள், நான்கு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ரோந்து பணியில் இருப்பர். ரோந்து பணியில் முறையாக ஈடுபடுவதாக தகவல் வந்திருக்கிறது. காவலர்கள் ரோந்து வராவிட்டால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்துவதன் மூலமாகத்தான் விபத்துகளைத் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். உயிரை துச்சமாக மதிக்காமல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் வசூலிக்க `இ-செலான்’ முறை நடைமுறைக்கு வருகிறது. இதன்படி விதி மீறுவோர் எத்தனை முறை விதி மீறியிருக்கின்றனர் என தகவல் வரும். அதன்பேரில் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கையால் பெருமளவு போதைப்பொருள் நடமாட்டம் புதுவையில் குறைந்திருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.