காலை, மாலை நேரங்களில் கடும் கூட்டம்: பெட்டிகள் பற்றாக்குறையால் திணறும் பாசஞ்சர் ரயில்கள்: பயணிகள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லையை மையமாக கொண்டு செங்கோட்டை, திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக கடும் கூட்டம் காணப்படுகிறது. செங்கோட்டை- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில் பெட்டிகள் மிக குறைவு காரணமாக பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். கொரோனா காலத்திற்கு பின்னர் ரயில்வேயில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி தொலை தூரங்களுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. குறுகிய தூரத்தில் செல்லும் பாசஞ்சர் ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டபோது கட்டணங்கள் இரு மடங்காக உயர்ந்தன.

இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் சீசன் டிக்கெட் காரணமாகவும், பாதுகாப்பான பயணம் என்பதாலும் பொதுமக்கள் இன்னமும் ரயில் பயணங்களையே விரும்பி வருகின்றனர். நெல்லையை மையமாக கொண்டு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களில் சமீபகாலமாக போதுமான அளவு பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. நெல்லை- செங்கோட்டை ரயில் 12 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த ரயிலில் காலை, மாலை வேளைகளில் கடும் கூட்டம் காணப்படுகிறது. சில சமயங்களில் அந்த ரயில் நெல்லையில் இருந்து புறம்போதே இருக்கைகள் காலியாகிவிடுகின்றன.

அம்பையை கடந்த பின்னரே ரயிலில் நின்று கொண்டிருக்கும் பயணிகளுக்கு இருக்கைகள் கிடைக்கின்றன. நெல்லை- திருச்செந்தூர் மார்க்க ரயில்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. நெல்லை மற்றும் பாளை ரயில் நிலையங்களில் இருக்கைகள் நிறைந்துவிடும் நிலையில், ஆறுமுகநேரியை கடந்த பிறகே பயணிகள் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏதாவது திருவிழா என்றால், பெட்டிகள் தோறும் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டியதுள்ளது. எனவே நெல்லை- செங்கோட்டை, நெல்லை- திருச்செந்தூர் மார்க்க ரயில்களில் காலை, மாலை நேரங்களில் மட்டுமாவது கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகி கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘கொரோனாவிற்கு முன்பு பாசஞ்சர் ரயில்கள் 15 பெட்டிகளோடு இயங்கி வந்தன. இப்போது சில ரயில்களின் பெட்டிகள் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டியதுள்ளது. நெல்லை- செங்கோட்டை மார்க்கத்தில் வருவாயை அள்ளித்தரும் அம்பை, பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் குறைவான பெட்டிகளோடு ரயில்கள் இயங்கி வருகின்றன. காலை, மாலை வேளைகளில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், சீசன் டிக்கெட் பயணதாரர்கள், வியாபாரிகள், கூலி வேலைக்கு செல்வோர் என பெரும்கூட்டம் ரயில்களில் காணப்படுகிறது.

ஆனால் அதற்கேற்ப பெட்டிகள் இல்லை. எனவே நெல்லை- செங்கோட்டை, நெல்லை- திருச்செந்தூர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்’’ என்றார். செங்கோட்டையில் இருந்து மதுரை சென்ற பாசஞ்சர் ரயிலில் முன்பு 15 பெட்டிகள் இருந்தன. அந்த ரயிலை இப்போது மயிலாடுதுறை வரை நீட்டித்த நிலையில், 10 பெட்டிகளாக மாற்றிவிட்டனர். ரயிலை நீட்டிப்பு செய்யும்போது பெட்டிகளில் கூட்டம் அதிகரிக்கவே செய்யும், ஆனால் பெட்டிகள் குறைப்பால் செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே பாசஞ்சர் ரயில்களில் போதிய பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.