மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அஹமத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தொண்டியில் இருந்த நூலகம் பழுதடைந்ததை தொடர்ந்து, கடந்த 2008 முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘பாழடைந்த கட்டிடம் இடித்து அகற்ற டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி 2 வாரத்தில் முடியும். இதன்பிறகு தேவையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், இதைப் போல தமிழ்நாடு முழுவதும் கிராமப்பகுதிகளில் பாழடைந்துள்ள நூலக கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய நூலக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
