சென்னை: தமிழக மக்கள் நினைத்ததுபோல் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டார். ஆனால், அவர் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது என்று ஆந்திர அமைச்சர் ரோஜா பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து திமுகவினர் பிறந்த நாள் நடத்திவருகின்றனர். சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி – இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ஆந்திர பிரதேச மாநில சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் ரோஜாவின் பேச்சு கவனம் ஈர்த்தது. விழாவில், “பெண்களுக்கு நல்லது செய்பவர்களை எனக்கு மிகப்பிடிக்கும். ஸ்டாலின் சார் தமிழக பெண்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார்.
தமிழக மக்கள் நினைத்ததுபோல் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டார். ஆனால், அவர் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது. ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார். அந்த எதிரி யார் தெரியுமா” என்றுக் கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “அந்த எதிரி கலைஞர் கருணாநிதி அவர்கள்தான். கருணாநிதி தமிழகத்துக்கு மிகப்பெரிய சாதனை திட்டங்களை கொடுத்தவர். அவர் செய்ததை மிஞ்சி, அவரைத் தாண்டி மக்களுக்கு செய்தால்தான் ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக முடியும்.
ஏனென்றால், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசியலுக்கு வரும்போது அவரின் தந்தையை ஒப்பிட்டு பேசினார். அவரின் தந்தை செய்ததை போல ஜெகன்மோகனால் செய்ய முடியாது என விமர்சித்தார்கள். ஆனால், இன்றைக்கு முதல்வர் ஆனபின் அப்பாவை விஞ்சிய முதல்வர் என்று ஜெகன்மோகன் பெயரெடுத்துள்ளார்.
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். அதன்படி, கருணாநிதியை விஞ்சிய முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என்று ரோஜா பேசினார்.