தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதம் போதுமானதாக இல்லை என்றும், அபராதத்தை உயர்த்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து பெயர்களை தமிழில் வைக்காமல் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது, தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணையின்படி கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும். மற்ற மொழிகளான ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும்.
கடைகள் நிறுவனங்களில் பெயர் பலகை குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கின்றது.
முன்னதாக, தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், “வணிகர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு தமிழில் பெயர் பலகை வைத்தால் மலர்கொத்து வழங்குவேன்.
தமிழக வணிகர்கள் கடைகளின் முன்பு பெயர் பலகையை தமிழில் எழுதுங்கள். அப்படி இல்லையென்றால் அழிப்பதற்காக ஒரு திங்கள் இடைவெளிவிட்டு தமிழகம் முழுவதும் நாங்கள் கருப்பு மை கொண்டு வந்து அழிப்போம். தமிழை காக்க எங்களுக்கும் வேறு வழியில்லை. இது விளம்பரத்துக்காகவோ, வாக்குக்காகவோ அல்ல” என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.