வாஷிங்டன் அரசுக்கு சொந்தமான, ‘மொபைல் போன்’கள் உட்பட, அனைத்து விதமான தகவல் தொடர்பு உபகரணங்களில் இருந்தும், ‘டிக் டாக்’ செயலியை நீக்க அமெரிக்க அரசு 30 நாட்கள் ‘கெடு’ விதித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த, ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், ‘டிக் டாக்’ மொபைல் போன் செயலியை உருவாக்கி, நிர்வகித்து வருகிறது.
இந்த செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியா உட்பட சில நாடுகள், ‘டிக் டாக்’ செயலிக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அரசுக்கு சொந்தமான தகவல் தொடர்பு உபகரணங்களில் இருந்து, ‘டிக் டாக்’ செயலியை நீக்கும் மசோதா, அமெரிக்க பார்லி.,யில் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேறியது.
அமெரிக்க ராணுவம், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறைகளில் பணியாற்றுவோர், ‘டிக் டாக்’ பயன்படுத்த ஏற்கனவே தடை அமலில் உள்ளது.
இந்நிலையில், ஜோ பைடன் அரசு நேற்று முன்தினம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க அரசுக்கு சொந்தமான அனைத்து மொபைல் போன்கள், மடிக்கணினிகள் உட்பட அனைத்து விதமான தகவல் தொடர்பு உபகரணங்களில் இருந்து, ‘டிக் டாக்’ செயலியை நீக்க 30 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 30 நாட்களுக்குள் செயலியை நீக்க, அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா முழுதும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை குடியரசுக் கட்சி எம்.பி.,க் கள் பார்லி.,யில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவை அடுத்து, வட அமெரிக்க நாடான கனடா அரசும், தங்கள் அரசுக்கு சொந்தமான தகவல் தொடர்பு உபகரணங்களில், ‘டிக் டாக்’ செயலியை பயன்படுத்த தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்