இப்படியும் ஒரு விளக்கமா..? என்று வியப்பில் ஆழ்த்துகிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு. கூடிப் பேசி, ‘ஆலோசித்து’ தரப்பட்டுள்ள விளக்கம், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது; மேலும் பல கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது.
பிப்.25 அன்று நடந்த முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட மோசமான குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பார்த்தால், ஆணையம் அதற்கு முற்றிலும் எதிர்திசையில் பயணிக்கிறது. அதாவது, மேலும் பல சிக்கல்களை தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கிறது.
‘முற்பகலில் நடைபெற்றது கட்டாயத் தமிழ்த் தகுதித் தேர்வு என்பதால் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது; அதன் மதிப்பெண்கள் தர வரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது’ என்று புதிதாக ஏதோ ஒன்றைப் போல விளக்கம் கொடுக்கிறது. ‘இதான் எங்களுக்கு தெரியுமே’ என்று இளைஞர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். அத்துடன் நின்றுவிடவில்லை ஆணையம், அடுத்ததாய் வேறு ஓர் உண்மையைச் சொல்லி எல்லாரையும் திக்கு முக்காட வைக்கிறது.
இதுவரை நடந்த தேர்வுகளின்படி, 98%க்கு மேலான தேர்வர்கள் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்று விடுகிறார்கள், அதனால் இத்தேர்வில் ஏற்பட்ட குளறுபடி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று நமக்குப் பாடம் நடத்துகிறது. அப்படியென்றால் என்ன பொருள்? இத்தேர்வில் ஏறக்குறைய எல்லாருமே தேர்ச்சி பெற்று விடுவீர்கள்.. பிறகு ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்..? என்பதுதான்.
தான் நடத்துகிற ஒரு தேர்வுக்கு ஆணையம் தருகிற மரியாதை இது! ‘கட்டாயத் தமிழ்த் தேர்வு என்பதெல்லாம் வெறுமனே ஒரு சடங்குதான் அதற்கு மேல் ஒன்றுமில்லை’ என்று அப்பட்டமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது ஆணையம். இதற்கு எந்த திசையில் இருந்தும் அதிகாரப்பூர்வ மறுப்புகள் வரவில்லை. இப்படி எல்லாரும் தேர்ச்சி என்றால் எதற்காக, யாரைத் திருப்திப்படுத்த இப்படியொரு தகுதித் தேர்வு? என தேர்வு எழுதிய இளைஞர்கள் கேட்கிறார்கள். மிகச் சிறந்த நாடக இயக்க தேசிய விருதுக்கு டிஎன்பிஎஸ்சி ஆணையம் முழுத் தகுதி பெறுகிறது.
ஆணையத்தின் தேர்வுக்காகத் தீவிரமாகப் படித்து பயிற்சி எடுத்த இளம் தேர்வர்களை இதை விடவும் சிறுமைப்படுத்த முடியாது. அடுத்த முறை இந்தத் தேர்வுக்கு வருகிற இளைஞர்களின் மனநிலை குறித்து எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
மதியம் நடந்த தேர்வில் குளறுபடிகளே இல்லை; எல்லாம் சுமுகமாக இயல்பாக நடந்தாற் போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிற இந்த நிலைப்பாட்டுக்கு ஆணையம் வர காரணம் என்ன? விடையில்லை. ஆனால், இளைஞர்கள் எழுப்பும் சில கேள்விகளின் அர்த்தம் ஆழம் ஆணையத்துக்குப் புரியவில்லையே!
சற்று தெளிவாகவே கேட்டு விடுவோமே…
காலைத் தேர்வின் விடைத்தாளில் முறையான தேர்வர் மட்டுமல்லாது, வேறொரு தேர்வரின் விடையும் இருந்தால் அதனை எப்படி எடுத்துக் கொள்வது? தேர்வர்கள் செய்தால் ஆள் மாறாட்டம்; ஆணையம் செய்தால் ‘ஆல் பாஸ் நாடகமா’? நன்றாக இருக்கிறது நியாயம்.
ஒரே ஒரு தேர்வரின் விடைத்தாளில் வேறொருவரின் பதில் இடம் பெற்று இருந்தாலும்கூட தேர்வு முறைப்படி நடக்கவில்லை என்றுதான் அர்த்தம். முறைப்படி நடைபெறாத எந்த தேர்வும், அடுத்த நிலைத் தேர்வுக்கு எவ்வாறு தகுதி பெற்றதாக கருத முடியும். அந்த தகுதியை வழங்க ஆணையத்துக்கு எங்கிருந்து சிறப்பு அதிகாரம் கிடைத்தது. அதனை எந்த சட்டம் வழங்கியது?
மாலை நேரத் தேர்வுக்கான வினா- விடை புத்தகக் கட்டு, தேர்வு அறையில் தேர்வர்களுக்கு எதிரில் திறக்கப்படவில்லை. பல மையங்களில் அது வேறு எங்கோ திறக்கப்பட்டு முறையாக வரிசைப்படுத்தப்பட்டு பின்னரே வெளிப்படையாக தேர்வு அறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையா? ஊருக்கே தெரிந்த ரகசியம் இது. இதற்கு ஆணையத்தின் பதில் என்ன?
பல மையங்களில் காலை மாலை இரு வேளையுமே மூன்று மணி நேரம் முழுமையாக தரப்படவில்லை என்று தேர்வர்கள் கூறுகின்றனரே, ‘அதெல்லாம் தவறு, கால அவகாசம் எல்லா மையத்திலும் சீராக சரியாகத் தரப்பட்டது’ என்பதை ஆணையத்தால் நிரூபிக்க முடியுமா? பல்லாயிரம் தேர்வர்கள் கூறுவது பொய்; ஆணையத்தின் ஒரு சிலர் கூறுவது மட்டுமே மெய் என்பதற்கு என்ன ஆதாரம்?
அநேகமாக. முதன்முறையாக தமிழ்நாடு முழுக்க எல்லாத் தேர்வு மையங்களிலும் எல்லாத் தேர்வர்களும் ஒருமித்த குரலில் மறுதேர்வு வேண்டும் என்று கோருகிறார்களே. தகுந்த வலுவான காரணம் இல்லாமலா இப்படியொரு கருத்தொற்றுமை ஏற்பட்டு இருக்க முடியும்.
கோரிக்கைகள், வலியுறுத்தல்கள், மனுக்கள், முறையீடுகள் என எல்லாத்தையும் விடுங்கள். மன உளைச்சல் இன்றி, அமைதியான மனநிலையில், பொதுவான சம வாய்ப்புடன் தேர்வு எழுதுகிற சூழலை உறுதி செய்வது ஆணையத்தின் பொறுப்பா இல்லையா. அது நடந்தேறியதா?
எல்லாவற்றையும் விட ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் ‘நம்பகத் தன்மை’. தேர்வு எழுதியோரின் மனதில் கனன்று கொண்டு இருக்கும் கோபம் தணிக்கப்பட வேண்டும். தமிழக இளைஞர்கள் இன்று ஆணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். எப்பாடு பட்டேனும் அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கிற முயற்சியில் ஈடுபடுவதுதான் அறிவுடைமை. மாறாக, நியாயப்படுத்துவதும், நிவாரணம் அளிப்பதும் யாருக்கும் பயன்தராது.
தவறான அணுகுமுறையால் ஆணையத்துக்கு ஏற்படும் இழப்பு, இழுக்கு எளிதில் ஈடு செய்ய இயலாதது.
யாருக்காக எந்த நோக்கத்துடன் பணியாளர் தேர்வாணையம் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த உயரிய நோக்கம் சிதைந்து போக அந்த ஆணையமே காரணமாகி விடக்கூடாது. அண்ணாந்து பார்க்கிற உயரத்தில் இருக்க வேண்டிய ஆணையத்தை, குனிந்து பார்க்கிற நிலைக்குத் தள்ளி விட வேண்டாம்.
இதில் ஆலோசிப்பதற்கு எதுவும் இல்லை – அறிவியுங்கள் மறுதேர்வு. அதுதான் இளைஞர்களுக்கு நல்லது; ஆணையத்துக்கும் கூட!