சென்னை: புதிய வகை தொற்று உருவாகி பரவ வாய்ப்பிருப்பதால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் ‘பேரிடரில் இருந்து கற்றுக்கொண்ட அறிவியல் பாடங்கள்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற பிறகு சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா சூழல் முடிந்தது என சொல்ல முடியாது. அது நம்முடன்தான் இருக்கப்போகிறது. ஆனால் தடுப்பூசி போன்றவற்றால் மக்களிடையே எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இதனால் பாதிப்பு பெரியளவில் இருக்காது. தற்போது ஒமைக்ரான் வகை தொற்று உள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வேறு வகை தொற்று உருவாகலாம். எனவே எதிர்காலத்தில் வர இருக்கும் தொற்றுகளை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். எனவே, நோய்த் தொற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அடுத்த பேரிடரை எந்த கிருமி உருவாக்கும் என சொல்ல முடியாது. சுமார் 27 குடும்பங்களைச் சேர்ந்த கிருமிகள், மிருகத்தில் இருந்து மனிதனுக்கு எப்போது பரவும் என தெரியாது. இது தொடர்பாக இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆய்வு செய்ய வேண்டும். உலக சுகாதார அமைப்பு அதனைச் செய்து வருகிறது. மேலும், நம்மிடம் உள்ள கட்டமைப்பை பயன்படுத்தி நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்.
கரோனா பேரிடரின்போது பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் குறைந்தளவு செலுத்தப்பட்டன. இதனால் தட்டம்மை போன்ற நோய்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்ய வேண்டும்.
காரணத்தை கண்டறிந்த பிறகு, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகள் வெளியே செல்லாமல் இருந்து, தற்போது வெளியே சென்று வருவதால் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. காய்ச்சல், இருமல் இருக்கும்போது முகக் கவசம் பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதை பழக்கமாக்கிக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.