பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் 100 ஆண்டுகளைக் கடந்த பெருமை வாய்ந்தது. தற்போதைய சென்னை மாநகராட்சியின் மேயராகப் பிரியா பதவி வகிக்கிறார். சென்னை மாநகராட்சியின் வார்டு பிரச்னை குறித்து விவாதிக்கும் மாமன்ற கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். அதன்படி, இந்தமாத மாமன்ற கூட்டம் நேற்று சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையின் உள்ள மாமன்ற அரங்கத்தில் நடைபெற்றது.
எப்பொழுதும் மன்றக்கூட்டம் திருக்குறளுடன் தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த கூட்டத்தில் ம.தி.மு.க-வை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஜீவன், இனி நடைபெறும் கூட்டத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அப்போது பேசிய மேயர் பிரியா, “இனி நடைபெறும் மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்” என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தொடங்கிய கூட்டத்தில், நூறு ஆண்டுக்கால வரலாற்றுப் பெருமை மிக்க சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கடந்த 16-ம் தேதி மறைந்த 122-வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, மாமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துப் பேசினார்கள். அப்போது சென்னை மாநகராட்சியின் ஒரே பாஜக உறுப்பினரான உமா ஆனந்த் பேசினார்.
அப்போது அவர், “சென்ற முறை காங்கிரஸ் உறுப்பினருக்கு இரங்கல் தெரிவிக்க எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்குள் இன்னொருவர் உயிரிழந்திருக்கிறார். இனிமேல் நான் வாய்ப்பு கேட்க மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இனி இதுபோன்று இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடக்காமல் இருக்கவேண்டும். அவரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி உதவ வேண்டும்” என்று பேசியிருந்தார்.
அப்போது பேசிய மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது” என்று கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய துணை மேயர் மகேஷ்குமார், “பதவிக்காலத்தில் உயிரிழக்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபாயைச் சிறப்புத் தீர்மானம் மூலமாக ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
“துணை மேயரின் இந்த கோரிக்கை முதலமைச்சரின் சிறப்புக் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்” என்று மேயர் பிரியா உறுதியளித்தார். பின்னர் கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, வரும் மார்ச் 2-ம் தேதிக்கு மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து மேயர் பிரியா கூட்டத்தை ஒத்திவைத்தார். கடைசியாகத் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.