திரையுலகில் 26 ஆண்டுகளைக் கடந்த யுவன் ஷங்கர் ராஜா

இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. அவரது இரண்டாவது மகனான யுவன்ஷங்கர் ராஜா, தனது 16வது வயதில் 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படம் வெளிவந்து நேற்றுடன் 26 ஆண்டுகள் ஆகியுள்ளது.

தான் இசையமைப்பாளரானதற்கு ஏஆர் ரஹ்மானும் ஒரு காரணம் என யுவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான் புதிய ஒலியமைப்பு, வித்தியாசமான இசை என தனது ஆரம்ப கால கட்டங்களில் புதிய அலையை ஏற்படுத்தினார். அவர் வந்த பின் இளையராஜாவின் இசையுடனான ஒப்பீடு அதிகமாக ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தனது அப்பாவின் பெருமையும், மதிப்பும் எந்த விதத்திலும் குறைந்து விடக் கூடாது என இசையமைப்பாளராக ஆனதாக அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

26 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை மிகவும் இளமையாக இருக்கிறது என இன்றைய இளைஞர்களும் தெரிவிக்கிறார்கள். எப்போதும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் யுவனின் இசையில் பல மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்துள்ளன. யுவன், நா முத்துக்குமார் கூட்டணி தமிழ் சினிமாவில் சில வருடங்கள் ஆட்சி செய்து வந்ததை ரசிகர்கள் இப்போதும் நினைவு கூறுவார்கள்.

எவ்வளவோ முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தாலும் இன்னமும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. விஜய் நடித்த ஒரே ஒரு படத்திற்குத்தான் யுவன் இசையமைத்திருந்தார். ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் கூட யுவனுக்கு வாய்ப்பு தர மறுத்தாலும் யுவன் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இன்றைய இளம் இயக்குனர்களுடனும் இணைந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். அதற்குக் கடந்தாண்டு வெளிவந்த 'லவ் டுடே' படம் மிகப் பெரும் உதாரணம்.

இசை வாரிசு ஆக சினிமாவுக்குள் வந்தாலும் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் இந்த யுவ(ன்) ராஜா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.