வாஷிங்டன்: தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காஷ்மீரில் மட்டும் 153 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்திய பாதுகாப்பு படைகளின் அதிதீவிர நடவடிக்கைகளால் காஷ்மீரில் ஓராண்டில் 193 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படைகளை சேர்ந்த 45 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பொதுமக்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த நவம்பர் 1-ம் தேதி மக்கள் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிவது, தீவிரவாத தாக்குதல்களை தடுப்பது, தீவிரவாத அமைப்புகளை அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
விமான நிலையங்கள், துறைமுகங்களில் பயோமெட்ரிக் சோதனை நடத்தப்படுகிறது. விமானத்தில் அனுப்பப்படும் சரக்குபெட்டகங்கள் இரட்டை எக்ஸ்ரேசோதனைக்கு உட்படுத்தப்படு கின்றன.
இந்தியா முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேருக்கு அண்மையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 2012-ம்ஆண்டில் பிஹாரின் புத்த கயாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் சார்பில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்திய கடல் எல்லை மிகவும் நீளமானது. கடல் எல்லையைப் பாதுகாக்க இந்திய அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குவாட் கூட்டமைப்பு சார்பில்இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த நவம்பரில் போர்ஒத்திகையை நடத்தின. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.