புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதே போல, சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை கடந்த 2021ல் அமல்படுத்தியது. இதில் மதுபான உரிமங்களை வழங்குவதிலும், மதுபான பார்களின் ஒதுக்கீட்டிலும் பல முறைகேடுகள் நடந்ததாக பாஜ குற்றம்சாட்டியது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் பல தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. கடந்த 26ம் தேதி, சிசோடியாவிடம் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய சிபிஐ அவரை கைது செய்தது. அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், சிசோடியா நேற்று தனது துணை முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதே போல, ஏற்கனவே டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரே நாளில் இரு அமைச்சர்களின் ராஜினாமாவையும் முதல்வர் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். கெஜ்ரிவால் அமைச்சரவையில் அதிகப்படியான துறைகளை கவனித்து வந்தவர் சிசோடியா. துணை முதல்வர் பதவி தவிர நிதித்துறை, கல்வித் துறை, திட்டத்துறை, விஜிலென்ஸ், பொதுப்பணி, உள்துறை என முக்கிய துறைகளை சிசோடியா வகித்து வந்தார். விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், சிசோடியாவின் பொறுப்புகள் அமைச்சர்கள் கைலாஷ் கெலாட் மற்றும் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோருக்கு தரப்படும் என தகவல்கள் கூறுகின்றன. புதிதாக எந்த அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என கூறப்படுகிறது.
* ஜாமீன் மனுவை விசாரிக்க மறுப்பு
சிசோடியா ஜாமீன் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் அவசர வழக்காக நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட அதிகாரம் இல்லை என்று கூறவில்லை. இருப்பினும் இதுபோன்று ஒவ்வொரு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என நினைக்கிறீர்கள் என்பது தான் தவறு. ஆனால் நாங்கள் இந்த வழக்கில் தலையிடவோ அல்லது விசாரிக்கவோ விரும்பவில்லை. உங்களது வழக்கை தொடர டெல்லியில் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. அந்த நீதிமன்றத்தை நாடலாம்’’ என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து மனு திரும்ப பெறப்பட்டது.