திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.18 கோடியில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வரவேற்பறை, மினி தியேட்டர் உள்ளிட்ட 10 கட்டிட தொகுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 6 தொகுதிகளில் 2 தளங்களில் கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வரும் 5, 6ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அரசுப்பணி ஆய்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். 5ம் தேதி மாலை கீழடி வரும் அவர், அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இதற்காக பணிகளை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் மதுசூதன ரெட்டி, தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.