மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சனா, உறுப்பினராக கேரளாவை சேர்ந்த பி.பி.வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ம.வெங்கடேசனுக்கு மீண்டும் பதவி
இவர்களின் பதவி வரும் 2025 மார்ச் 31 வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ம.வெங்கடேசன் கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் 2022 மார்ச் வரை பதவி நீட்டிக்கப்பட்டது. அப்போது, 120 மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர்
அதில் சரியான நேரத்தில் ஊதியம், இ.எஸ்.ஐ, பி.எஃப், வார விடுமுறை உள்ளிட்டவை அடங்கும். இந்த சூழலில் இரண்டாவது முறையாக தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவராக ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
பாஜகவில் அங்கம்
இந்துத்துவா சிந்தனையில் திராவிட அரசியலுக்கு எதிராக பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்துத்துவா அம்பேத்கர்’, ’எம்.ஜி.ஆர் என்கிற இந்து’, ’பெரியாரின் மறுபக்கம்’, ’தலித்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி’ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. தொலைக்காட்சி விவாதங்களில் அவ்வப்போது தலைகாட்டுவார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்தல் கணக்கு
இதையொட்டி ’தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற கோஷத்தை அவ்வப்போது கேட்க முடிகிறது. கடந்த 2021 தேர்தலின் போதே 4 எம்.எல்.ஏக்கள் பாஜக சார்பில் வென்று சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தனர். அடுத்து 2024 மக்களவை தேர்தலை நோக்கி அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும்? யார் சரியான வேட்பாளர்கள்? என டெல்லி பாஜக தலைமை திட்டம் வகுத்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம்
குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தமிழகத்தை சேர்ந்த பாஜக அபிமானிகளுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கும் வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, பாஜக மூத்த தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.
குஷ்புவிற்கு பதவி
இதையடுத்து குஷ்புவிற்கு தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கி அறிவிப்பு வெளியானது. இதன் தொடர்ச்சியாக ம.வெங்கடேசனுக்கு பதவி வழங்கியுள்ளனர். இவற்றின் பின்னணியில் பல்வேறு விதமான அரசியல் கணக்குகள் இருப்பதாக பேசப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு விதங்களில் முக்கியத்துவம் அளித்து வருவதாக சுட்டிக் காட்டி மக்களவை தேர்தலுக்கு தயாராவதே திட்டம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.