தாய்ப்பால் புகட்டுவதால் மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பலாம்! | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 10

இன்றைய காலகட்டத்தில், ‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு, பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். சென்ற அத்தியாயத்தில், தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து விரிவாகக் கண்டோம். அடுத்ததாக, தாய்ப்பாலினால் விளையும் நன்மைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

தாய்ப்பால் கொடுக்கும் விகிதம்:

குழந்தை பிறந்ததில் இருந்து, முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்; ஆறு மாதங்களுக்குப் பிறகு, 2 வயது வரையோ அதற்கு மேலாகவோ, இணை உணவுடன் (Complementary Feeding) தாய்ப்பால் கொடுக்குமாறு உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்க குழந்தைநல மருத்துவ அகாடமியும் (American Academy of Pediatrics) அறிவுறுத்துகின்றன. எனினும், இந்திய அளவில், தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் குறைவாகவே காணப்படுகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் 2019-21-ல் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey – 5) முடிவில், 41% பச்சிளங்குழந்தைகள் மட்டுமே, பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் தாய்ப்பால் கிடைக்கப்பெற்றுள்ளனர். 64% குழந்தைகளில் மட்டுமே, 6 மாதங்கள்வரை முழுமையாக தாய்ப்பால் கிடைக்கப்பெற்றுள்ளனர்.

எனினும், தாய்ப்பால் கிடைக்கும் கால அளவு, மேலை நாடுகளைவிட இந்தியாவில் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் சராசரியாக 33.5 மாதங்கள் வரையும், நகர்ப்புறங்களில் சராசரியாக 25.8 மாதங்கள் வரையும் குழந்தைகள் தாய்ப்பால் ஊட்டப்படுகின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் விகிதத்தை அதிகப்படுத்தவும், தாய்ப்பாலினால் விளையும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பால்

தாய்ப்பாலினால் குழந்தைக்கு விளையும் நலன்கள்:

தாய்ப்பாலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நீர் என அனைத்துமே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சம அளவில் கலந்திருப்பதுடன், ஆன்டிபாடிகள் மற்றும் கனிமங்களும் காணப்படுகின்றன.

நோய் எதிர்ப்புத் திறன்:

தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோயிலிருந்து காப்பாற்றும் வகையில், பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை காணப்படுகின்றன. குழந்தை பிறந்த முதல் 2- 4 நாள்களில் சுரக்கும் சீம்பாலில், ஆன்டிபாடிகளும் நோய் எதிர்ப்பு செயல்கூறுகளும் அதிகளவு காணப்படுவதால், குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், தாய்ப்பாலிலுள்ள ஆன்டிபாடிகளும், நோய் எதிர்ப்பு செயல்கூறுகளும், பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கின்றன.

தாய்ப்பால் புகட்டும் நிலை

பச்சிளங்குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு முழுமை பெற்றிருக்காதென்பதால், தாய்ப்பாலில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இன்றியமையாததாகும். தாய்ப்பாலில் உள்ள இம்யூனோகுளோபுலின் (Secretory Immunoglobulin A), வயிற்றுப்போக்கு, நிமோனியா, காது தொற்றுகள் போன்றவற்றில் இருந்து குழந்தையைக் காக்கிறது.

குறைந்த நீரிழிவு நோய், உடல்பருமன், ஒவ்வாமை:

முழுமையான தாய்ப்பாலூட்டல் கிடைக்கப்பெற்ற குழந்தைகளில், குறைந்த காலத்துக்கு மட்டும் தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள், மற்றும் விரைவாகவே பசுப்பால், திண்ம ஆகாரம் வழங்கப்படும் குழந்தைகளைவிட குறைந்த அளவிலேயே நீரிழிவு நோய், உடல்பருமன், ஒவ்வாமை போன்றவை காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், எதிர்பாராதவிதமாக, காரணம் கண்டுபிடிக்க முடியாதபடி குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் குழந்தை இறப்பு நோய்க்கூட்டறிகுறி (Sudden Infant Death Syndrome – SIDS), தாய்ப்பாலூட்டல் கிடைக்கப்பெற்ற குழந்தைகளில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

உடல் பருமன்

தாய்ப்பால் கிடைக்கப்பெறும் குழந்தைகளில், குறிப்பாக குறைமாத பச்சிளங்குழந்தைகளில், தீவிரமான குடல் அழற்சி நோய் Necrotizing enterocolitis (NEC) ஏற்படும் அபாயம் குறைவாகக் காணப்படுகிறது. தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள், தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளை காட்டிலும், தமது பிந்தைய வாழ்வில் கூடிய அறிவாற்றலுடன் இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பாலினால் தாய்க்கு விளையும் நலன்கள்:

தாய்-சேய் பிணைப்பு:

ஆக்ஸிடோசின் (Oxytocin), புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன்கள், தாய்ப்பாலூட்டலின்போது சுரக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுத்தால், ஆக்ஸிடோசின் ஹார்மோன் மேலும் சுரந்து, கர்ப்பப்பை சுருங்கி, பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கைத் தடுக்கிறது. தாய், சேய் பிணைப்பு அதிகரிக்கிறது.

எடைக்குறைப்பு:

கருத்தரிப்பு காலத்தில் தாய்க்கு 10-16 கிலோ வரை எடை கூடும். குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் 6 மாத காலத்துக்கு முழுமையாக தாய்ப்பாலூட்டுவதால், உடலில் படிந்துள்ள கொழுப்பு சக்தி பயன்படுத்தப்பட்டு, தாய்மார்கள் கருத்தரிப்பிற்கு முந்தைய உடல் எடைக்குத் திரும்ப உதவுகிறது.

கருத்தடை:

தாய்ப்பாலூட்டும் காலத்தில், தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாறுதலால், மாதவிடாய் இன்மை (Lactational Amenorrhea) ஏற்படும். முழுமையாக தாய்பாலூட்டும் தாய்களில், குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு 98% கருக்கட்டல் ஏற்பட வாய்ப்பில்லாத நிலை காணப்படும். குழந்தை மற்றும தாயின் நலன் கருதி, குழந்தை பிறந்ததிலிருந்து அடுத்த குழந்தைக்கு 2-3 வருட இடைவெளி தர வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்பகப் புற்றுநோய்

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு:

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களில் மார்பகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் (Ovarian Cancer) ஏற்படும் அபாயம் குறைவாகவே காணப்படுகிறது. மேலும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களில் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைவாகவே காணப்படுகிறது.

இவ்வாறு தாய்க்கும் சேய்க்கும் பல்வேறு நன்மைகளை விளைவிக்கும் தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். ஆறு மாத மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பும் தாய்மார்கள் வேலை நேரத்தில் தாய்ப்பாலளிக்க ஏற்ற சூழலும் தாய்ப்பாலூட்டும் அறைகளும் உருவாக்கப்பட வேண்டும். மேலும் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாய்ப்பாலூட்டும் அறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

அடுத்த வாரம், தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கும் உணவு மற்றும் மருத்துவ முறைகள் பற்றி விரிவாகக் காண்போம்.

பராமரிப்போம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.