திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வங்கி மேலாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமைத் தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது :- “மாவட்டம் முழுவதும் உள்ள வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக 24 மணிநேரமும் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் அனைத்து திசைகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும், பழுதடைந்த கேமராக்கள் இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்” என்று பேசினார்.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசியதாவது:- “ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ கேமராக்களை ஏ.டி.எம். மற்றும் வங்கியின் அறைகளில் பொருத்துவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய முடியும்.
ஏ.டி.எம் மையம் மற்றும் வங்கிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனே அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரியும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும்.
மேலும்., காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையத்தை இரவில் செயல்படாத வண்ணம் பூட்டி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சந்தேகப்படும் நபர்கள் குறித்து 94429 92526 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரியப்படுத்தலாம்” என்றுத் தெரிவித்தார்.