புதுடெல்லி: தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு மராட்டியம் மட்டுமின்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு வந்த அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்பானியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து உளவுத்துறையின் தகவலின்படி முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு Z பிரிவில் இருந்து Z+ பிரிவிற்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதற்கான எல்லை மராட்டியத்திற்குள் மட்டுமே என்பதை தெளிவுபடுத்துமாறும் முறையிட்டார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, முகேஷ் அம்பானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அம்பானிக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அச்சுறுத்தல் உள்ளதாக வாதிட்டார். இதையடுத்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அம்பானி குடும்பத்திற்கு Z+ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்கான செலவை அவர்களே ஏற்கவும் ஆணையிட்டனர்.