புதுடெல்லி: திரிபுரா உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் கணிப்புகளால் பாஜக உற்சாகமடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலும் காங்கிரஸுக்கு பின்னடைவு தொடரும் நிலை தெரிகிறது.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் வென்ற நரேந்திரமோடி பிரதமரானது முதல் பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது. அடுத்த வருடம் மக்களவை தேர்தலில் பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என எதிர்க்கட்சிகள் நம்புகின்றனர்.
இதற்கு, மத்திய அரசின் மீதான பல்வேறு புகார் நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. இச்சூழலில், 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் 2023 இல் உள்ளது. இது, மக்களவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது.
இதன் துவக்கமாக திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கானத் சட்டப்பேரவை தேர்தல் தற்போது முடிந்துள்ளது. மார்ச் 2 நாளை வெளியாக உள்ள இதன் முடிவுகள் மீதான கணிப்புகள் பாஜகவை உற்சாகப்படுத்திவிட்டன.
நேற்று முன்தினம் மாலை வெளியான இந்த கணிப்புகள் மீண்டும் பாஜகவிற்கு சாதகமாகவே வெளியாகி உள்ளன. இதில், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும், மேகாலயாவில் மட்டும் அக்கட்சிக்கு பத்திற்கும் குறைவான தொகுதிகள் என பெரும்பாலாகக் கணிக்கப்பட்டுள்ளன.
வட கிழக்கு பகுதியின் சிறிய மாநிலங்களிலான இந்த மூன்றிலும், தலா 60 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாஜக 2014 முதல் தொடர்ந்து தன் கால்களை பதித்து வருகிறது.
குறிப்பாக திரிபுராவில் கடந்த 35 வருடங்களாகத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளின் ஆட்சியை பாஜக 2018 இல் தட்டிப் பறித்திருந்தது. இங்கு வரலாற்றில் இல்லாத வகையில் முதன்முறையாக கைகோர்த்த காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியின் தோல்வி மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஏனெனில், திரிபுராவில் கிடைக்கும் வெற்றியின் அடிப்படையில் வேறு மாநிலங்களில் அக்கூட்டணி அமைக்கவும் திட்டமிடப்படுகிறது. திரிபுராவில், பாஜகவிற்கு 2018 இல் கிடைத்த 36 தொகுதிகள் இந்தமுறை 45 என உயர்வதாகக் கணிப்புகள் கூறியுள்ளன.
இந்த கணிப்புகளின்படி நாளை முடிவுகள் வெளியானால் அவை, பாஜகவிற்கான சிறப்பு செய்திகளாக இருக்கும். இவை சிறிய மாநிலங்களாக இருப்பினும், அடுத்து வரும் மாநில தேர்தல்களில் இம்மூன்றின் முடிவுகள் பாஜகவினரைஉற்சாகமாகப் பணியாற்ற வைக்கும்.
இதையடுத்து, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளன. இவற்றிலும் வெற்றி பெறுவதற்காகத் தம் தொண்டர்கள் தீவிரம் காட்டுவார்கள் என பாஜக நம்புகிறது.
இந்த 3 மாநிலங்களின் கணிப்புகளிலும் காங்கிரஸுக்கு இதர கட்சிகளை விடக் குறைவான தொகுதிகளில் தான் வெற்றி என்றாகி உள்ளது. பாஜகவிற்காகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் திரிபுரா பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கி இருந்தனர். இதற்கு அங்கு இடதுசாரிகளுடன் கூட்டணியாகப் போட்டியிடுவது எனவும் காரணம் வெளியானது.
இதேபோல், இம்மூன்று மாநிலத் தேர்தல்களில் பெரும் நம்பிக்கை வைத்திருந்த திரிணமூல் காங்கிரஸுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், எந்த கட்சிக்கும் தனிமெஜாரிட்டி காட்டாத மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சிக்கு(என்பிபி) அதிக தொகுதிகள் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்தமுறை பாஜகவுடன் இணைந்த என்பிபி இந்தமுறை ‘கிங் மேக்கர்’ வாய்ப்பை பெறும் தலைவர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.