கோவை காளப்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பயனடையும் வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் அண்ணாமலை, தகுதியே இல்லாத அவர், பத்திரிக்கைகளில் தனது இருப்பை காட்டுவதாக பேசிவருகிறார். கடந்த தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தும், அரவக்குறிச்சி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். நோட்டாவுடன் போட்டி போடுபவர்களின் கருத்து தொடர்பான கேள்விகளை தவிர்க்க வேண்டும். இன்னும் ரபேல் வாட்ச் பில்லை ஒப்படைக்கவில்லை.
பொதுவெளியில் ஒருவரை பற்றி குறை சொல்லும்போது முதலில் நாம் எப்படி இருக்கிறோம் என நினைத்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் எத்தனை பாஜக உறுப்பினர்கள் உள்ளனர் என அண்ணாமலையால் கூற முடியுமா? இதுவரை 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோம் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். இன்று இரவுக்குள் மீதமுள்ளவர்கள் இணைப்பார்கள் என நம்புகிறோம். திமுக ஆட்சியில் காற்றாலை மின்சாரம் ஒரு யூனிட் கூட வீணடிக்கப்படவில்லை. முழுமையாக பயன்படுத்தப்பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல முறை நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.