மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: 14 வயதில் தொடங்கிய போராட்டம்.. மேயர் முதல் முதலமைச்சர் வரை..!

எனக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்த தம்பி மு.க. ஸ்டாலினுக்கு முழு தகுதி இருக்கிறது
என 2015ல் அப்போதைய
திமுக
தலைவர் கலைஞர் கருணாநிதி கூறிய வார்த்தைகள் இன்று நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. என்னதான் பொதுவெளியில் வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று கூப்பாடு போட்டாலும் மு.க. ஸ்டாலின் கடந்து வந்த பாதை மிக சாதாரணமானது அல்ல. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு திமுகவின் தலைவர் என்ற பதவி கிடைக்க அவருக்கு 30 ஆண்டுகள் ஆகியுள்ளது.

14 வயதில் தொடங்கிய போராட்டம்:

வாரிசு அரசியல் என்று சொல்வதற்கு முன் அதனை சிறிது உற்றுநோக்கினால், கலைஞர் கருணாநிதி ஒன்றும் மு.க. ஸ்டாலினுக்கு கட்சியில் எடுத்தவுடனேயே முக்கிய பதவி அளிக்கவில்லை. ஏன் அரசியலில் ஈடுபடவும் அழைக்கவில்லை. மு.க. ஸ்டாலினின் அரசியல் பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கி விட்டது. ஒரு சாதாரண தொண்டனாக திமுகவில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மு.க. ஸ்டாலின், தலைவர் பதவியை அடையும்வரை ஓடிய அரசியல் ஓட்டம் கொஞ்சநஞ்சமல்ல. தற்போது 70 வயதை எட்டியுள்ள அவருக்கு ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் உள்ளது.

முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

அய்யாதுரை டூ மு.க. ஸ்டாலின்:

கலைஞர் கருணாநிதி தயாளு அம்மாளுக்கு மூன்றாவது மகனாக 1953 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிறந்தவர்தான் மு.க. ஸ்டாலின். பொதுவாக கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் குடும்ப நபர்களின் பெயர்கள் அனைத்தும் தூய தமிழில் இருக்கும். ஆனால் ஸ்டாலினின் பெயர் மட்டும் இதில் மாறுபட்டது. ஸ்டாலினுக்கு முதலில் கலைஞர் சூட்டை இருந்த பெயர் அய்யாதுரை என்பதுதான். இந்த பெயரை சூட்ட கலைஞர் விரும்பியதற்கு ஒரு காரணம் இருந்திருக்கிறது. தந்தை பெரியாருக்கு அய்யா என்ற செல்லப் பெயர் உண்டு. அந்த பெயரையும், அண்ணாதுரையில் இருந்து ‘துரை’ என்பதையும் எடுத்து ‘அய்யாதுரை’ என்று தனது மகனுக்கு பெயரிட நினைத்திருக்கிறார் கலைஞர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால் ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலினின் மரணத்தை அடுத்து நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் அவரைப் பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருந்த கலைஞருக்கு தனக்கு மகன் பிறந்ததாக செய்தி கிடைக்கிறது. உடனே அப்போதே, அந்த இடத்திலேயே வைத்து தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரை சூட்டி இருக்கிறார். இதன் மூலம் பிறந்த தினத்தன்று புரட்சியாளர் ஸ்டாலின் வழியில் தனது பயணத்தை துவங்கி விட்டார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். புரட்சியாளரின் பெயரை வைத்ததால் தான் என்னவோ ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. பள்ளியில் தொடங்கி, தனது அரசியல் வாழ்க்கை வரை பல்வேறு சவால்களை எதிர் கொண்டு, தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக கம்பீரமாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் மு. க.ஸ்டாலின்.

கலைஞர் தனது மகன் ஸ்டாலினை பள்ளியில் சேர்க்க முயன்ற போது, அவரது பெயரை காரணம் காட்டி பள்ளி நிர்வாகத்தினர் புரட்சியாளரின் பெயரை வைத்திருக்கிறீர்கள் எனவும், இந்த பெயரை மாற்றி விட்டு வந்தால் பள்ளியில் சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தனது மகனின் பெயரை மாற்ற மறுத்த கலைஞர், பள்ளியையே மாற்றி இருக்கிறார். தனது பள்ளி படிப்பை சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் உள்ள பள்ளியில் படித்து முடித்துள்ளார்.

இளைஞர் அணி அமைப்பாளர் டூ மாநகராட்சி மேயர் :

தனது பள்ளிப் பருவத்திலேயே அரசியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஸ்டாலின், 1968 ஆம் ஆண்டில் அரசியல் ஆர்வம் மிகுந்த இளைஞர்களுடன் இணைந்து கோபாலபுரத்தில் இளைஞர் திமுக எனும் அமைப்பினை ஆரம்பித்துள்ளார். அந்த அமைப்பின் மூலம் அப்போது அவர் போட்ட விதைதான், 1980ல் திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த இளைஞர் அணியில் அவரை அமைப்பாளர் பதவியில் அமர வைத்தது. முன்னதாக 1967 ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1973 ஆம் ஆண்டு திமுகவின் பொது குழு பொது குழு உறுப்பினரான சமயத்தில், 1975 இல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை கவனித்து வந்த ஸ்டாலின் முதன்முறையாக 1984 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் 1989 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் இரண்டாவது முறையாக வெற்றியை பெற்று, அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, மூன்றாவது முறையாக வெற்றி கண்டு எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

கலைஞர் உயிருடன் இருக்கும் வரை தலைவர் பதவி என்று இடத்தில் கலைஞர் மட்டுமே இருந்திருக்கிறார். ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி முதல் தமிழக முதலமைச்சர் பதவி வரை கலைஞர் கருணாநிதி வைத்த அனைத்து பரிட்சைகளிலும் ஸ்டாலின் தேர்ச்சி பெற்றதால் மட்டுமே, இன்று இந்த முதலமைச்சர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஆகஸ்டு 28, 2018 அன்று திமுக தலைவராக மு. க. ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 2018 ஆம் அன்று திமுக தலைவர் பதவியில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் ஆறு மாதங்களிலேயே, 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்றவாறு வலுவான கூட்டணியை அமைத்து, 40 இடங்களுக்கு 39 இடங்களை கைப்பற்றினார். திமுக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு தளபதி ஸ்டாலின் என்ற பெயர் சாதாரணமாக கிடைத்தது அல்ல. ஒரு படையில் மன்னரின் இடத்தை விட சேனாதிபதி மற்றும் தளபதியின் இடம்தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அது போல திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெரும் இயக்கத்தை வழி நடத்துவது வேண்டுமானால் ஆரம்பம் தொட்டே கட்சியில் இருக்கும் அனுபவம் மிக்க மூத்த தலைவர்களாக இருந்தாலும், கட்சி வேலைகளையும், மக்களின் வேலைகளையும் விரைந்து முடிக்கும் வகையில் அடுத்த தலைமுறையினருக்கு இடம் கொடுத்து இளம் தலைவர்களை உருவாக்கியதற்காக தொண்டர்கள் கொடுத்த பெயர்தான் தளபதி ஸ்டாலின்.

முதலமைச்சரான பிறகு மு.க. ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள்:

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுகவின் அப்போதைய முதலமைச்சர் தொடங்கிய அம்மா உணவகங்களை அடுத்து நொறுக்கிய கட்சி தொண்டர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே அதிரடி நீக்கம் செய்து மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், எதிர்க்கட்சியினரிடம் வெறுப்பு அரசியலை கைவிட்டது தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு சர்வ லட்சணமாகவும் பார்க்கப்பட்டது.

பின்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுத்த புத்தகப் பைகளில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படங்கள் இருந்த போதிலும் அதனை நீக்க வேண்டாம் எனவும், இந்த பைகளையே மாணவர்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவிட்டதும் அவரின் அரசியல் அனுபவத்தை காட்டியது. தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அரசு விழா எடுத்தது நாகரிக அரசியல் என அனைத்து கட்சியினர் இடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் ஆட்சி மாறி ஆட்சி வந்த போதிலும் அங்கீகாரம் கிடைக்காத இருளர் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி சமூகத்தில் அந்தஸ்தையும் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதேபோல் கட்சி சார்ந்த முடிவுகளாக இருந்தாலும், ஆட்சி சார்ந்த முடிவுகளாக இருந்தாலும் மக்களை மனதில் வைத்து, கொரோனா காலத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம், நம் பள்ளி நம் பெருமை திட்டம், காலை உணவு திட்டம் போன்ற
அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களின் மனதிலும், திமுக தொண்டர்களின் மத்தியிலும் நீங்காத இடத்தை பெற்றுள்ளார் இன்று தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.