பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர் தலில் பாஜக 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களமிறங்குகின்றன. இந்தத் தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் இனி அடிக்கடி இங்கு வருவேன். 40 நாட்கள் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பெங்களூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட இடங்களில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பேன்.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை எடுத்துக்கூறி பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். பாஜக ஆட்சிக்கு மக்களிடம் நற்பெயர் இருப்பதால், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 140 தொகுதிகளில் எங்களது கட்சி வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்’’ என்றார்.