மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 25.9.2017-ல் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா எந்த சூழ்நிலையில் உடல் நலக் குறைவால் 2016 செப். 22-ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்?
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து மரணம் அடைந்த டிச.5 வரை அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் 151 சாட்சிகளை விசாரித்தது. நான் 146-வது சாட்சியாக விசாரிக்கப்பட்டேன். ஆணையம், விசாரணை அறிக்கையை 23.8.2022-ல் அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் எவ்வித சட்டக் காரணமும் இல்லாமல் என் மீது தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சாட்சியாக அழைக்கப்பட்ட என் மீது தவறான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் எனது அரசியல் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இது விசாரணை ஆணையச் சட்டத்துக்கு எதிரானது.
இந்நிலையில் விசாரணை ஆணைய அறிக்கை அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் 17.10.2022-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். இதுவும் சட்டவிரோதம். இயற்கை நியதிக்கு முரணானது.
எனவே, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் பத்தி 39.1 முதல் 39.7 மற்றும் 47.28-ல் என்னை தொடர்புப்படுத்தி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கவும், அந்தக் கருத்துகள் அடிப்படையில் என் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜராஜன் வாதிட்டார். பின்னர், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும், அவற்றைப் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதித்தும், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.