இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னரும், தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, மத்திய ஊராக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங்கை சந்தித்து, அந்தத் துறை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார் எனக் கூறப்படுகிறது.
மாலை 4.30-க்கு பிரதமர் மோடியை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,” பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண விழாவில் கலந்துக்கொண்ட பிறகு, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். சென்னை வந்திருந்தபோது, டெல்லி வந்தால் சந்தித்துவிட்டுதான் செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார். அதனடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தது. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்துவிசாரித்தார்.
நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் வலியுறுத்தி பேசினேன். அதற்கான விளக்கங்களை தெரிவித்தார். நானும் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை எடுத்துரைத்திருக்கிறேன். நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன். மேலும், என் விளையாட்டுத்துறை குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.