இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான செண்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது.ரயில் புறப்படும் நேரம், ரயில் வந்து சேரும் நேரம், நடைமேடை எண், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம், தாமதமாகும் ரயில் விவரம் என அனைத்தையும் ஒலிபெருக்கி மூலம் ரயில் நிலையத்தில் எந்த பகுதியில் இருந்தும் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
இந்நிலையில் தென்னக ரயில்வேயின் தலைமையகமாக செயல்பட்டு வரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒலி மாசை குறைப்பதற்காக ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் வெளியிடப்படுவது சோதனை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈவேரா பெரியார் சாலை, வால்டாக்ஸ் சாலை, புறநகர் ரயில் நிலையம் செல்லும் பகுதி என மூன்று இடங்களில் 40*60 என்ற அளவில் உள்ள டிஜிட்டல் பலகையில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒளிபரப்பப்படுகிறது. விமான நிலையங்களில் அறிவிப்புகள் நிறுத்தப்பட்டது போல இந்தியாவிலேயே முதல் அறிவிப்பு இல்லாத ரயில் நிலையமாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இது இறுதி நேரங்களில் அவசரமாக வெளியூருக்கு செல்ல வரும் பொது மக்களுக்கு, படிக்கத்தெரியாதவர்களுக்கு, செவித்திறன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் தமிழ்நாட்டிற்கு வரும் மக்கள் வருகை தரும் இடமாக உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒலிபெருக்கியில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தான் அனைவருக்கும் உதவும் வகையில் இருக்கும் என்றும், ரயில் என்ஜின் சத்தம் பொதுமக்களின் சத்தம், ரயிலின் ஹார்ன் சத்தம் ஆகிய பேரொலிகளுக்கிடையே இந்த நடவடிக்கை என்பது சரியானது அல்ல என்றும், ஒலிபெருக்கியில் அறிவிக்கும் அறிவிப்பை நிறுத்தாமல் மீண்டும் தொடர வேண்டுமென ரயில் பயணிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.