தேனி மாவட்டத்தில் திருமணமான ஒரே மாதத்தில் உடலில் தீ வைத்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மீனா(20). இவர்களுக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரகாஷ் வேலை காரணமாக சென்னை சென்றதால் மீனா அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து சம்பவத்தன்று மீனா திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மீனாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், அதிர்ச்சியடைந்து உடனடியாக மீனாவை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்பொழுது சிகிச்சையில் இருந்த மீனா, தாயிடம் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓடைப்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.