அட்வென்ச்சர், டிரெக்கிங் என்றெல்லாம் சொன்னால் பலருக்கும் ஆண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். அதையும் மீறி பெண்கள் நினைவுக்கு வந்தாலும், அவர்கள் இளம் வயதினராகவே இருப்பார்கள். இந்தக் கருத்தை உடைக்கும் வகையில், 35 ப்ளஸ் வயதில் உள்ள பெண்கள், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 12,000 அடிகளுக்கும் மேலான உயரத்தில் உள்ள டோரியா தால் மற்றும் சந்திரஷீலா ஆகிய இரண்டு இடங்களுக்கு டிரெக்கிங் சென்று வந்துள்ளனர்.
தகவலைக் கேள்விப்பட்டதும் டிரெக்கிங் போன பெண்களைத் தேடிச் சென்றோம். டிரெக்கிங் சென்றவர்களில் ஒருவரான 43 வயது வெங்கடேஸ்வரி உற்சாகமாக நினைவுகளைப் பகிர ஆரம்பித்தார்…
“அக்டோபர் மாசம் டோரியா தால் மற்றும் சந்திரஷீலா டிரெக் இருக்கு. யாருக்காவது இன்ட்ரெஸ்ட் இருக்கா?”-ன்னு ஒருநாள் காலையில, ராஜிகிட்ட இருந்து வாட்ஸ்அப் குரூப்ல மெசேஜ் வந்துச்சு. அதைப் பார்த்ததும் டிரெக்கிங் போலாமா… அப்படிப் போகணும்னா என்னென்ன பிசிக்கல் ஃபிட்னெஸ் தேவைப்படும்னு யோசிச்சேன். நாங்க போன தனியார் டிரெக்கிங் வெப்சைட்டுல பிசிக்கல் ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம்னு குறிப்பிட்டிருந்தது. அதுக்கேத்த மாதிரி நான் என்னைத் தயார்படுத்திக்க தொடங்கி, அதுல ஜெயிச்சுட்டேன்” என்பவரின் கண்களில் வெற்றிப் பெருமிதம்.
டிரெக்கிங் பயணம் தொடங்கியது பற்றி பகிர தொடங்கினார் 52 வயதாகும் ராஜலட்சுமி…
“சென்னைல இருந்து டெல்லிக்கு ஃப்ளைட்ல போய், அங்கிருந்து டெஹ்ராடூன். அங்கிருந்து ரிஷிகேஷுக்கு கார்ல போனோம். ஒரு ராத்திரி அங்கேயே தங்கிட்டு, அடுத்த நாள் எங்க பேஸ் கேம்ப் அமைஞ்சுருந்த சாரி அப்படிங்கற இடத்துக்குப் போயிட்டோம். 7 டிகிரி டெம்பரேச்சர்ல நம்ம உடம்பு தாங்குமானு அன்னிக்கு ஒருநாள் அங்கேயே தங்கினோம். டிரெக்கிங் போகும்போது நம்ம லக்கேஜை தூக்கிட்டு வர ஆள் வெச்சுக்கலாம். ஆனா எங்க லக்கேஜை நாங்கதான் தூக்கிட்டுப் போகணும்னு முடிவு பண்ணிட்டோம். நாங்க நாலு பேரும் 10 கிலோ பையைத் தூக்கிட்டுதான் டிரெக்கிங் போனோம்.
டிரெக்கிங்குக்கு ஏற்பாடு பண்ணின நிறுவனமே, குப்பைகளைப் போட ஒரு பை, நாங்க தூங்கறதுக்கு ஸ்லீப்பிங் பேக் எல்லாம் தந்தாங்க. ரொம்ப முக்கியமான விஷயம் டாய்லெட். அங்கே தூர தூரமா சின்னச் சின்ன டாய்லெட்தான் இருந்துச்சு. தண்ணீர் கிடையாது. டாய்லெட் பேப்பர்தான். டிரெக்கிங் பண்ண ஆறு நாள்களும் நாங்க குளிக்கக்கூட இல்லை. அந்தக் குளிர்ல குளிச்சா ஹைப்பர்தெர்மியா என்ற பிரச்னை வரலாம்னு சொன்னதும் ஒரு காரணம். டிரெக்கிங்ல எங்களுக்கு ஒரு லீடர் இருந்தாங்க. அவங்க எங்க எல்லாருக்கும் தினமும் காலையிலயும் சாயந்திரமும் பிபி, இதயத்துடிப்பெல்லாம் செக் பண்ணி, பத்திரமா இருக்கோமானு பார்த்துக்கிட்டாங்க…’’ ராஜலட்சுமி நிறுத்த, அவரின் 46 வயது தோழி சித்ரா தொடர்ந்தார்.
“டிரெக்கிங் பண்ணின ஒவ்வொரு நாளும் கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனா எந்த இடத்துலயும் எங்களுக்கு விட்டுடலாம்ன்னு தோணல. கடைசி நாள் நாங்க அதிகாலையில 2.30 மணிக்கு டிரெக்கிங் பண்ண ஆரம்பிச்சோம். அப்போதான் சந்திரஷீலாவுல சூரிய உதயம் பார்க்க முடியும். நாங்க 12,083 அடி உயரத்தில் உள்ள சந்திரஷீலாவுக்கு போன அந்த நிமிஷ சந்தோஷத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
நாலு நாள் டிரெக்கிங்ல கார்வால் ரேஞ்ச், குமாவுன் ரேஞ்ச், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், செளகம்பா, நந்தா தேவின்னு பல இடங்களையும் பார்த்தோம். இமயமலைத் தொடரைப் பார்த்ததுதான் ஹைலைட்! டிரெக்கிங் போறதுக்கு முன்னாடி, நாமதான் ஜிம் போறோமே… நமக்கெல்லாம் பிசிக்கல் ஃபிட்னெஸ் இருக்கும்… டிரெக்கிங்லாம் நமக்கு ஜுஜுபின்னு நினைச்சோம். ஆனா டிரெக்கிங் பண்ண ஆரம்பிச்ச ரெண்டு மணி நேரத்துலேயே, எங்க நினைப்பு எவ்ளோ தப்புன்னு புரிஞ்சிடுச்சு. அத்தனை கஷ்டங்களும் கடைசிநாள்ல மறந்து, மனசெல்லாம் அவ்ளோ நிறைவா இருந்தது” என்கிறார் வியப்பு விலகாமல்.
“இது ஓர் ஆரம்பம்தான்… அடுத்தடுத்து அடிக்கடி டிரெக்கிங் போற ஐடியாவுல இருக்கோம்” என்று தொடங்கினார் 38 வயதாகும் சங்கீதா.
“பெண்கள்னாலே குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு, வீட்டுக்குள்ளயே இருக்கணுமா என்ன? அவங்க ஆசைகளும் முக்கியம்னு நினைக்கணும். இப்பல்லாம் குடும்பத்தார்கிட்ட நம்ம விருப்பங்களைச் சொன்னா புரிஞ்சுக்கிறாங்க. அதெல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்கன்னு நாம நம்ம ஆசையைச் சொல்லாமலே விட்டுட்டோம்ன்னா, அப்புறம் அது நடக்காமலே போயிடும். அதனால உங்க நியாயமான கோரிக்கைகளை, ஆசைகளை குடும்பத்தார்கிட்ட பகிர்ந்துக்கோங்க…’’ என்று முக்கியமான மெசேஜுடன் முடித்தார்.
“எல்லாப் பெண்களும் டிரெக்கிங் அனுபவத்தை ஃபீல் பண்ணணும். இந்த வருஷ சர்வதேச மலைதின தீம் என்ன தெரியுமா… Women move Mountain! அப்புறமென்ன… கிளம்புங்க ஃபிரெண்ட்ஸ்…’’ தோழிகள் துள்ளலோடு சொல்ல, டிரெக்கிங் கனவோடு அங்கிருந்து விடைபெற்றோம்.