தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை எழுதி அரசுப் பணியாற்ற வேண்டும் என்ற தங்கள் கனவை நிறைவேற்ற உழைத்து வருகின்றனர்.
அரசு இயந்திரம் சரிவர இயங்குவதற்கு அதிகாரிகள், அலுவலர்களின் பணி முக்கியமானது. தகுதியானவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே அதன் பலனை அனுபவிப்பார்கள். அதில் தவறுகள், குளறுபடிகள் நடைபெறும் போது தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திலேயே பெரும் தேக்கத்தை தற்போதும் வருங்காலத்திலும் ஏற்படுத்தும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்யும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி குரூப் 1, குரூப் 2ஏ தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாள் வழங்குவதில் தாமதம், பதிவெண்ணில் குளறுபடி ஆகியவை ஏற்பட்டது. மேலும் தேர்வர்கள் சிலர் புத்தகத்தை பார்த்தும், மொபைல் போனை பார்த்தும், அருகில் உள்ளவர்களிடம் கேட்டும் எழுதியுள்ளனர் என்கிறார்கள்.
தேர்வர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் அவர்கள் மிகவும் அலட்சியமாக இந்த விவகாரத்தை கையாண்டதாகவும் தேர்வு எழுதியவர்களே கூறுகின்றனர். பிரச்சினை மீடியாவுக்கு தெரியவந்த பின்னரே டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஏன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் குளறுபடி நடக்கிறது என்பது குறித்து விசாரித்தோம். டிஎன்பிஎஸ்சி தலைமை பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்வு எப்படி நடைபெறும், அதன் செயல்முறைகள் என்ன என்பது குறித்த முழு புரிதல் இல்லாதவர்கள் அந்த பணிகளில் அமரவைக்கப்படும் போது எழும் பிரச்சினை தான் இது என்கிறார்கள்.
மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுதி பதவி பெற்ற அதிகாரிகள் தலைமை பொறுப்புக்கு வரும்போது கீழ் உள்ள நடைமுறைகள் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதற்கு முன்னர் டிஎன்பிஎஸ்சி அனுபவம் உள்ள அதிகாரிகள் பணியாற்றிய காலத்தில் துறை மீது விமர்சனங்கள் எழவில்லை.
தமிழ்நாட்டில் அத்தனை துறைகளுக்குமான அதிகாரிகள், ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பின் தலைமைப் பொறுப்புகளை துறை ரீதியான அனுபவமும், திறமையும் வாய்ந்தவர்களிடம் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.