காங்டாக்: குடியிருப்பு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக மக்கள் புலம் பெயர்வதைத் தடுக்க வடக்கு எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக துடிப்பான கிராமங்கள் திட்டம் (விவிபி) செயல்படுத்தப்படும் என 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில், விவிபி திட்டத்துக்கு ரூ.4,800 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டம் 4 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட 19 மாவட்டங்கள் மற்றும் 46 எல்லை பகுதிகளில் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில் செயல் படுத்தப்படும். இதில் முதல்கட்ட மாக 663 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
சிக்கிம் மாநிலம் காங்டாக் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறியதாவது: விவிபி திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய எல்லையோர கிராமங்களுக்கு சென்று கண்காணிக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சன் கிராமத்தை நான் தேர்வு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.