இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்ற சிறப்பு, சென்னைக்கு உண்டு. இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பலவற்றிலும் உயர்தர சிகிச்சை கிடைப்பதால், உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பெரும் நம்பிக்கையுடன் சென்னைக்கு வருகின்றனர்.
அதுபோல, சென்னையைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார்.
உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், ‘இம்பெல்லா’ எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மிகுந்த கண்காணிப்பு மற்றும் துல்லியமான சிகிச்சை அளித்து, அந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.
அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் இதயத்தில் கீழ்நோக்கிச் செல்லும் முன்புற தமனி முழுமையாக அடைபட்டிருந்தது. இதனால், அவர் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவான அளவில்தான் இருந்தன.
இந்நிலையில் மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள் உட்பட உடலின் பிற உறுப்புகளுக்குச் சேதம் ஏற்படாதவாறு ‘இம்பெல்லா’ சாதனம் அவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நடந்த சிகிச்சை முறைகள் குறித்து அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கூறுகையில், “உலகின் மிகச்சிறிய இதய பம்ப் என அறியப்படுகிற ‘இம்பெல்லா’ சாதனம், இதய கீழறைகளிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை உந்தித்தரும் பணியைச் செய்யும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் இதய செயலிழப்பு தடுக்கப்பட்டு, பாதிப்பிலிருந்து நோயாளியால் மீள முடிந்தது. சிறுநீர் வெளியேற்ற அளவும் அதிகரித்தது. இதய செயலிழப்பைச் சுட்டிக்காட்டும் அறிகுறிகளிலும், சுவாச மண்டல செயல்பாடுகளிலும் முன்னேற்றம் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பின்னர், இரண்டு வாரங்கள் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நோயாளி நலமுடன் வீடு திரும்பினார். அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்றனர்.