பெங்களூரு-
பெங்களூரு ஹெப்பால் பகுதியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டோர் பயிற்சிகால ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம் நடத்தினர். இதில் பீதர், ஹாசன், சிவமொக்கா மற்றும் கதக் மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது அவர்கள், ‘கால்நடை மருத்துவ படிப்பின்போது இறுதி ஆண்டில் முதல் 6 மாதங்கள் வெளிமாவட்டங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதனை தொடர்ந்து 6 மாதம் வெளிமாநிலங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டி உள்ளது. அரசு சார்பில் மாதம் ரூ.18 ஆயிரம் பயிற்சி கால ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும்போது போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கு அந்த தொகை போதியதாக இல்லை. அந்த தொகையை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் இன்றுவரை அது நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நாங்கள், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பொது இடத்தில் கூடி போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.