பஞ்சாபில் ஜனநாயகத்தை பாதுகாத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி: முதல்வர் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாப் மாநில ஜனநாயகத்தை பாதுகாத்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆளுநருக்கு எதிராக பகவந்த் மான் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கும், ஆளுநருக்கு பகவந்த் மான் எழுதிய கடிதத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கும் ஆளுநர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மனு தாக்கல் செய்தது. அதில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 3ம் தேதி கூட்டப்பட வேண்டும் என்று அமைச்சரவை சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டது என்றும், ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று(பிப். 28) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே வெளியிட்டுவிட்டதாகவும், எனவே, இந்த வழக்கு அர்த்தமற்றது என்றும் வாதிட்டார்.

அவரது வாதத்தை அடுத்து, ஆளுநரும் முதல்வரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆளுநருக்கு சட்டப்படி இருக்கும் அதிகாரம் என்ன என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது. ”சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டாலும், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்தும் விருப்ப உரிமை ஆளுநருக்குக் கிடையாது. இந்த விவகாரத்தில், ஆளுநர் சட்ட ஆலோசனை கேட்பது இதற்கு முன் நடந்தது கிடையாது. ஆளுநரும் முதல்வரும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள். அதற்கு ஏற்ற மாண்பை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அதேநேரத்தில், முதல்வர் பகவந்த் மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை தனது ட்விட்டர் பக்கத்திலும், ஆளுநருக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் ஆளுநரும் முதல்வரும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆளுநர் கேட்கும் விவரங்களை அளிக்க மாநில அரசு கடமைப்பட்டிருக்கிறது. அதேபோல், அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார்” என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் பகவந்த் மான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள் ட்விட்டர் பதிவில், ”பஞ்சாபில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புக்கு நன்றி. இந்த தீர்ப்பின் மூலம் 3 கோடி பஞ்சாபியர்களின் குரல் பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எவ்வித தடையும் இன்றி ஒலிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.