காணாமல்போன மாடல் அழகி; சூப்பில் கண்டெடுக்கப்பட்ட தலை… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

அப்பி சோய் என்ற 28 வயது மாடல், ஹாங்காங்கில் வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து இவரைக் காணவில்லை. இவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், இரண்டு நாள்கள் கழித்து தாய் போ என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், துண்டாக்கப்பட்ட உடல் பாகங்களைக் குளிர்சாதனப் பெட்டியில் கண்டுபிடித்தனர்.

அப்பி சோய்

இது மட்டுமல்லாமல் அந்த வீட்டில் எலெக்ட்ரிக் ரம்பம், கறி வெட்டும் கருவி மற்றும் சில ஆடைகளும் இருந்துள்ளன. இப்பெண்ணின் தலை, முண்டம் மற்றும் கைகள் கிடைக்கவில்லை. தற்போது அதிகாரிகள் காணாமல் போன அந்தத் தலையைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தத் தலையானது சூப் மற்றும் மனித எச்சங்கள் அடங்கிய இரண்டு பெரிய பானைகளில் ஒன்றில் இருந்துள்ளது.  

இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி ஆலன் சுங் கூறுகையில், “அந்த சூப்பில் இருந்த தலையில் தோலோ, இறைச்சியோ இல்லை. அது  முடியுடன் கூடிய மண்டை ஓடு. கேரட் மற்றும் முள்ளங்கி போன்றவற்றைப் போல அவை சூப்பில் மிதந்தன.

சூப்பில் உள்ள திரவம் பானையின் உச்சிவரை இருந்தது. பானை முழுவதும் நிரம்பி இருந்தது. அதில் நிறைய கொழுப்புகள் இருந்தன. கேரட் மற்றும் முள்ளங்கிகள் இருந்தன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியும் இருந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இவர் காரில் பயணிக்கையில் தலையில் தாக்கப்பட்டு, அந்த வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் கொள்கின்றனர். தடயவியல் சோதனையில், அவர் தலையில் பலமாகத் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

குற்றம்

இந்தக் கொலைக் குற்றத்தில் காவல் துறையினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவருக்கும் அவரின் முன்னாள் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் பல ஆயிரக்கணக்கான ஹாங்காங் டாலர்கள் சம்பந்தப்பட்ட நிதி தகராறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரின் முன்னாள் கணவர் அலெக்ஸ் குவாங், அவரின் தந்தை குவாங் காவ் மற்றும் சகோதரர் அந்தோணி குவாங் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சோயின் முன்னாள் மாமியார், ஜென்னி லி, ஆதாரங்களை அழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

நான்கு பேரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. பிரபல மாடலின் மண்டை ஓடு சூப்பில் இருந்த சம்பவம் ஹாங்காங்கில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.