லால்குடி: லால்குடி அருகே கல்லக்குடியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடியில் கிராம கமிட்டி சார்பில், ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 600 காளைகள், 500 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதன்பிறகு வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.
காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மிக்சி, தங்கக்காசு, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், சிறந்த காளைக்கு பைக் பரிசாக வழங்கப்படுகிறது.