புதுடெல்லி: பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரித்ததாகவும், பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு 11.78 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மின் நுகர்வு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு 10.80 ஆயிரம் கோடியாக இருந்தது. அது இந்த ஆண்டு 11.78 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கும் முந்தைய நிலவரத்தைப் பார்க்கும்போது, கடந்த 2020 பிப்ரவரியில் பயன்படுத்தப்பட்ட மொத்த மின்சார யூனிட்டின் அளவு 10.38 ஆயிரம் கோடியாக இருந்தது. 2021 பிப்ரவரியில் இது 10.32 ஆயிரம் கோடியாக இருந்தது.
மின்சார பயன்பாடு அதிகரிப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருப்பதை உணர்த்துகிறது என தெரிவிக்கும் நிபுணர்கள், இந்த மார்ச் மாதத்தில் மின்சார பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். பொருளாதார வளர்ச்சிக்கான செயல்கள் மேலும் அதிகரிக்கும் என்பதாலும், மார்ச் மாதத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்பதாலும் இந்த உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், வரும் கோடைக்காலத்தில் நாட்டில் மின்சார தேவையின் அளவும் பயன்பாட்டின் அளவும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.