தேனி: தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டம் பெரியகுளம், போடி, தேவதானம்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்தது. இதனால் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். பெரியகுளம் வட்டாரத்தில் தற்போது மாம்பூக்கள் பூத்துள்ளன. இந்த சோழலில் மழை பெய்வதால் பூக்கள் அழுகி மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சுற்றுவட்டாரத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக விடாது மழை பெய்தது.
குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உட்பட நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதல் சாரல் மழை பெய்தது. கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் மழை பதிவானது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையாபுரம், கயத்தாறு பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்தது.