இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டுகால காதல்
கர்நாடக மாநிலம் டோம்லூரில் பணியாற்றி வந்தவர் தினகர்(28). இவரும் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா என்ற இளம்பெண்ணும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
லீலா கர்நாடகாவின் முருகேஷ்பால்யாவில் பணியாற்றி வந்தார்.
இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, சாதியை காரணம் காட்டி அவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தினகர், தனது காதலியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
கொடூர கொலை
இந்த நிலையில், செவ்வாய்கிழமை பணிமுடிந்து வெளியே வந்த லீலாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினகர் சரமாரியாக குத்தியுள்ளார்.
கழுத்து, மார்பு, வயிறு என பலத்த காயம் ஏற்பட்டதால் லீலா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து தினகர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லீலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், லீலாவின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியை பொது இடத்தில் இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.