புதுடெல்லி: “நன்றாக திட்டமிடப்பட்டு கட்டப்படும் இந்திய நகரங்கள், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினர் உரையில் அவர் இன்று, ‘நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “இந்தியாவில் நகரமயமாகி வருவது வேகமாக நிகழ்ந்து வரும் நிலையில், எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானதாகும்.
நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களே இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். திட்டமிடல் சிறப்பானதாக இருக்கும்போது நமது நகரங்கள் காலநிலையைத் தாங்கும் வகையிலும், நீர்ப் பாதுகாப்பு மிக்கதாகவும் மாறும்.
நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வளர்ச்சி என்பது, மாநிலங்களில் நகர்ப்புற திட்டமிடுதல் சூழலை எவ்வாறு வலுப்படுத்துவது, தனியார் துறைகளில் இருக்கும் நிபுணத்துவத்தை எவ்வாறு நகர்ப்புற திட்டமிடலுக்கு பயன்படுத்துவது, நகர்ப்புற திட்டமிடலை புதிய நிலைக்கு கொண்டுசெல்ல இந்த மையங்களின் திறமைகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது ஆகிய மூன்றும் நகர்ப்புற திட்டமிடுதலின் முக்கியமான தளங்களைக் கொண்டது” என்று பிரதமர் பேசினார்.
மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளை, திறமையாக செயல்படுத்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக இந்திய அரசு இதுபோன்ற வெபினார்களை உருவாக்கியுள்ளது.