கொரோனாவால் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.. மதிப்பெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் “கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-2021 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை திரும்ப பெற்று 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டங்களில் பயின்றவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், ரயில்வே துறையில் 1,03,769 குரூப் டி பணியிடங்களுக்கும், 40,889 தபால் துறை பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரன்டிஸ் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளில் சேர 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம்.

எனவே, மதிப்பெண்ணுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் “ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என வாதிட்டார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அதனை பதிவு செய்துகொண்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.