லக்னோ: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தியாவில் தடை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், 2017 மார்ச் 8 ல் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், முகமது பைசல் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணை அடிப்படையில், கவுஸ் முகமது கான், முகமது அசார், அதிக் முசாபர், முகமது டானீஸ், முகமது சயீத் மீர் ஹூசைன், ஆசிப் இக்பால் மற்றும் முகமது அதிப் என்ற ஆசிப் இரானி ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு, லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவர்கள் தசரா கொண்டாட்டத்தின் போது, பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்த சதி செய்ததாக வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர்கள், ஜாகீர் நாயக்கின் பேச்சுகளில் ஈர்க்கப்பட்டவர்கள் எனக்கூறியதுடன், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இணையதளத்தை அடிக்கடி பார்த்ததுடன், அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து மற்றவர்களுக்கும் பரப்பியதாக தெரிவித்தார்.
அவர்கள் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆயுதங்கள், வெடிமருந்துகள், மின்னணு சாதனங்கள், ஐஎஸ் ஆதரவு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி விஎஸ் திரிபாதி, இந்த வழக்கு அரிதிலும் அரிதான வகையில் வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக்கூறியதுடன், 7 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
10 ஆண்டு சிறை
அதேபோல், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், சமூகவலைதளம் மூலம் ஐஎஸ்ஐஎஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக ஆட்கள் சேர்த்ததுடன், அந்த அமைப்பின் கருத்துகளையும் பரிமாறியதாக கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்