நியூயார்க்:கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவ தொடங்கியத்திலிருந்தே, கரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து குழப்பமான பதில்களே சுற்றி வந்தன.
இந்த நிலையில் அமெரிக்க அரசு தொடர்ந்து, சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா பரவியதாக தொடர்ந்து கூறி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்க எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநர் கிறிஸ்டோபர் தொலைகாட்சிக்கு அளித்தப் பேட்டியில் கூறும்போது, “கரோனா தொற்றின் உருவாக்கம் எங்கு உள்ளது என்பதை அடையாளம் காணும் முயற்சிகளை தடுப்பதற்கு சீனா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது. இது அனைவருக்கும் துரதிருஷ்டவசமானது. உண்மையில் சீனாவுக்கு சொந்தமான வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா பரவியுள்ளது. இதற்கான சாத்தியமே அதிகம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் பிற புலனாய்வு அமைப்புகள் கரோனா வைரஸ் வூஹான் சந்தையிலிருந்து பரவியதாக உறுதியாக கூறுகின்றன.
முன்னதாக வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தான் எழுதிய ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள்” புத்தகத்தில், ”கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 2019-ல் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை உலகம் முழுவதும் 67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.