புதுச்சேரி: அரசு கட்டமைப்பை குழந்தைகள் அறிய ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்வு புதுச்சேரியில் தொடங்கியது. முதலாவதாக தேர்வான அரசுப் பள்ளி மாணவி ஐஸ்வர்யா, ஆட்சியர் மணிகண்டனுடன் இன்று ஒரு நாள் இருந்து அனைத்து பணிகளையும் கவனித்தார்.
அரசு கட்டமைப்பை பள்ளிக் குழந்தைகள் அறிய ஒரு பள்ளிக் குழந்தை தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள் முழுவதும் இருப்பார். அதன் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கிடைக்கும். இந்திய ஆட்சிப் பணி, அரசு கட்டமைப்பு ஆகியவற்றை ஆட்சியர் அருகிலேயே இருந்து குழந்தை கவனிக்க வாய்ப்பு கிடைக்கும்.
பள்ளிக் கல்வித்துறை மூலம் ஒரு குழந்தை தேர்வு செய்யப்படுவார் என்று ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா, முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் அலுவலகம் சென்றார்.
அவர் ஆட்சியர் மணி கண்டனுடன் அமர்ந்து மக்கள் குறைக் கேட்பு, ஆட்சியர் அலுவலகம் செயல்பாடு ஆகியவற்றை பார்த்தார். பின்னர் ஆட்சியருடன் கள ஆய்வு பணிக்கு வந்தார். பின்னர் சட்டப்பேரவைக்கு ஆட்சியருடன் மாணவி வந்தார். அங்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்தை சந்தித்தார். சட்டப்பேரவை வளாகத்தையும், பேரவைக் கூட்டம் நடக்கும் இடத்தையும் பார்த்தார்.
அங்கு பேரவைத் தலைவர் இருக்கை, முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் இருக்கைகள் விவரத்தையும் செயல்படும் விதத்தையும் பேரவைத் தலைவர் செல்வம் விவரித்தார். பிறகு பேரவையை சுற்றிக்காட்டி விளக்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் மணிகண்டன் கூறுகையில், “ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்வில், அரசுப் பள்ளி மாணவி தேர்வாகி அரசு நிர்வாகம் செயல்பாடு, மக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை நேரில் பார்த்தார். இதன் மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையப் படிப்புகள், இந்திய ஆட்சிப் பணி செயல்பாடுகள் பார்த்தார்.
அரசுப் பள்ளி குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் செயல்படவும், இந்திய ஆட்சிப் பணி விவரங்கள் அறியவும் வாய்ப்பாக அமையும். இம்முறை வாரந்தோறும் புதன்கிழமை இனி செயல்படுத்த உள்ளோம்” என்றார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்சியரும், மாணவியும் புறப்பட்டபோது காவல்துறை சல்யூட் அடித்து அனுப்பிவைத்தனர். மாணவி தனது கைவிரலை உயர்த்தி தனது மகிழ்வை வெளிப்படுத்தியப்படி புறப்பட்டார்.