இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழி தமிழில் படிக்காமல் பட்டம் பெரும் அவலம் இருப்பதாக, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதுகுறித்து இன்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது, “மருத்துவர் அய்யா அவர்கள் ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முக்கிய நோக்கம் மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழை கொண்டு வரவேண்டும்.
நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர் கல்விகள் தமிழ் படித்தவர்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பெயர் பலகைகளில் தமிழ் முதன்மையிடத்தில் இருக்க வேண்டும், இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்திதான் ‘தமிழைத் தேடி’ பயணத்தை அய்யா அவர்கள் தொடர்ந்துள்ளார்.
உலகத்திலேயே மிகப் பழமையான மொழி தமிழ் மொழி தான். ஆனால், இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் தாய்மொழி தெரியாமல் பட்டம் பெற முடியும். வேறு எந்த மாநிலத்திலும் அவர்களின் மொழி தெரியாமல் பட்டம் பெற முடியாது. இந்த அவலநிலை மாற வேண்டும்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என்ற ஒரு வாக்குறுதி அளித்தது, ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களின் நிலைப்பாடு என்பது குறித்து, தேர்தலுக்கு ஐந்து மாதத்துக்கு முன்பாக அறிவிப்போம். 2026 இல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ற வியூகங்களை வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வகுப்போம். அதுவரை கூட்டணி தொடர்பான எந்த வதந்திகளையும் நம்ப வேண்டும். நாங்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்றார்.